Skip to main content

மனநோயாளிகளை சாமியாராக்கும் பிரபலங்கள்-ஏமாற்றப்படும் பக்தர்கள்

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
nn

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பிரபலமானது. தென்னிந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான சாதுக்கள், சாமியார்கள் என்கிற பெயரில் யாசகர்கள் (பிச்சைக்காரர்கள்) இருக்கின்றனர். வித்தியாசமான இந்த யாசகர்களில் யாராவது ஒருவரை, சாது, ஞானி என பிரபலப்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் திருவண்ணாமலையில் உருவாகியுள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிச்சைக்காரர் பசிக்கும்போது மட்டும் ஏதாவது ஒரு ஹோட்டல் அல்லது டீ கடையில் கையேந்துவார், சிலர் தருவார்கள், சிலர் 'சூடுதண்ணிய ஊத்திடுவன் போய்டு' என விரட்டிவிடுவார்கள். இட்லி, டீ தந்தால் வாங்கி சாப்பிட்டுவிட்டு அண்ணாமலையார் கொவில் அம்மணியம்மன் கோபுரம் கால்வாய் ஓரம் படுத்துக்கிடப்பார். தாடி வளர்த்துக்கொண்டு, அழுக்கு துணியுடன் எப்போதாவது யாரிடமாவது மூக்குபொடி கேட்பார். இவருக்கு வயதானதால் நடக்கமுடியாமல் தாங்கி நடக்கவும், தன்னைப் பார்த்து குறைக்கும் நாய்களை விரட்டவும் கையில் ஒரு கம்பு வைத்திருந்தார். அடிக்கடி கடைகளில் மூக்குபொடி வாங்கியதால் கடைக்காரர் ஒருவர் மூக்குபொடி சாமியார் என அழைக்க அவர் பெயரே மூக்குபொடி சாமியார் என்றானது.

மூக்குபொடி சாமியார் கையில் வைத்துள்ள கம்பால் அடி வாங்கினால், அவரிடம் திட்டு வாங்கினால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும், செல்வம் பெருகும் என சிலர் திட்டமிட்டு பரப்பிவிட்டார்கள். அதை நம்பி வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் படையெடுத்து வந்தனர். நடிகர்கள் சந்தானம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போன்ற அரசியல், சினிமா பிரபலங்கள் இந்த மூக்குபொடி சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்து தேவுடு காத்துக் கொண்டிருந்தார்.

மூக்குபொடி சாமியார் என்கிற யாசகரை பிரபலங்கள் வணங்க வரும்போது எல்லாம் டி.டி.வி.தினகரனின் நண்பரும் பிரபல ஹோட்டல் அதிபரான முத்துக்கிருஷ்ணன் என்பவர், மூக்குபொடி சாமியாருக்கு புத்தாடை அணிவித்து தனது ஹோட்டலுக்கு அழைத்து வந்து உட்கார வைத்துவிடுவார். அங்கு அவரை வணங்கிவிட்டு அவரிடம் திட்டு வாங்க காத்துக்கொண்டு இருந்தார். மூக்குபொடி சாமியார் கால் தங்கள் வீட்டில், தொழில் நிறுவனத்தில் படவேண்டும் என அவரை அழைத்தது. அந்த கும்பல், அவரை வெளிமாநிலங்கள், வெளியூர்களுக்கு அழைத்து சென்று கல்லா கட்டியது. நான்கு வருடங்களுக்கு முன்பு அவர் இறந்தபோது, அவரது உடலை கிரிவலப்பாதையில் ஒரு இடத்தில் அடக்கம் செய்து இப்போது அதை ஒரு கோயிலாக்கி கல்லா கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

nn

இப்போது வயதான மனநோயாளியான ஒரு பெண்மணி வாயில் எச்சில் ஒழுக விட்டுக்கொண்டு கிரிவலப்பாதையில் எங்காவது சுற்றிக்கொண்டு இருப்பார். இவர் பெயர் தொப்பியம்மா, இவர் பெரிய ஞானி எனச்சொல்லி சிலர் பரப்பி விட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மனநோயாளி சித்தராக வடிவமைக்கப்பட்டு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் பிரபலப்படுத்தப்பட்டார். இப்போது கூட்டம் கூட்டமாக வந்து வணங்குகின்றனர். அவரை வைத்து சிலர் கல்லா கட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இந்த பெண்மணி மனநோயால் பாதிக்கப்பட்டு பெங்களுருவில் சுற்றிக்கொண்டு இருந்தவர், திருவண்ணாமலை வந்துள்ளார். கொரோனாவுக்கு முன்பிருந்து கிரிவலப்பாதையில் சுற்றி சுற்றி வருகிறார். இவரை பெண் சித்தராக்கியதன் விளைவாக இந்த மனநோயாளி பின்னால் எப்போதும் 10 பேர் சுத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர் எச்சில் பிரசாதம் என்கிறார்கள். அவர் யாரையாவது பார்த்து எச்சில் துப்பி அது தங்கள் மீது விழுந்தால் பாக்கியம், அதிர்ஷ்டம் என்கிறார்கள்.

இந்த தொப்பியம்மா என்கிற மனநோயாளியை கடந்த மே 25ஆம் தேதி டி.டி.வி.தினகரன் கிரிவலப்பாதையில் உள்ள ஒரு ஆஸ்ரமத்தில் பார்த்து வணங்கினார். அந்த மனநோயாளி தன் மீது எச்சில் துப்புவார் என அவர் பின்னாலயே சென்றார். இந்த வீடியோ பிரபலமாகியுள்ளது. பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். பக்தி என்கிற பெயரில் மனநோயாளிகள் பின்னால் சுற்றும் இவர்கள் மனநோயாளிகளா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பக்தி இருக்க வேண்டியதுதான் அது அவர்களது தனிமனித உரிமை. ஆனால் பக்தி என்கிற பெயரில் மனநோயாளிகளையும், பிச்சைக்காரர்களையும் சாது, ஞானி என விளம்பரத்தி காசு சம்பாதிக்கும் கும்பலுக்கு இப்படி பிரபலங்கள் துணை போகலாமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடங்கிய இடத்திலேயே 'பிக்பாக்கெட்'; சசிகலா கூட்டத்தில் அதிர்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Pickpocket right where the tour starts; shocked the Sasikala crowd

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா எனப் பல தரப்புகளும் பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், அதேபோல் சசிகலா தரப்பும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக இரண்டாவது முறையாக 'அம்மா வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் மீண்டும் சுற்றுப் பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். தென்காசி அடுத்த காசிமேசபுரத்தில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சுற்றுப் பயணம் தொடங்கிய இடத்திலேயே பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் 5 பேரிடம் மர்மநபர் ஒருவர் பிக்பாக்கெட் அடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் வந்த சசிகலாவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். இதனால் அங்கு பொதுமக்கள் கூடியதோடு செய்தி நிறுவனங்களின் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் செய்தியாளர்கள் மற்றும் மக்களிடமிருந்து மர்ம நபரால் பணம், நகை, பர்ஸ் ஆகியவை பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிக்பாக்கெட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

'நான் கடவுள்' - மயானமான ஆன்மீக சொற்பொழிவு மைதானம்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'I am God' - Mystical Spiritual Discourse by Boleh Baba

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க பல்லாயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காக கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சிக்கி குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

'I am God' - Mystical Spiritual Discourse by Boleh Baba

அண்மைய தகவலாக ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. 18 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நெரிசலில் சிக்கி இறந்தவர்களில் அதிகப்படியானோர் பெண்கள், குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. சொற்பொழிவு நடத்தப்பட்ட இடம் மயானம் போல் காட்சியளிக்கிறது. 80 ஆயிரம் பேர் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில் சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான மக்களை ஒரே இடத்தில் அடைத்து வைக்க முயன்றுள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். சொற்பொழிவு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில்தான் போலெ பாபா அண்மையில் குடியேறி வசித்து வந்துள்ளார்.

'I am God' - Mystical Spiritual Discourse by Boleh Baba

போலெ பாபா சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. போலீஸ் அதிகாரியாக இருந்து பின்னர் சாமியாராக மாறிய போலெ பாபா ஏற்கனவே கொரோனா காலத்தில் அரசு நிறைய தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்த பொழுதும் கூட 50,000 பேரை சொற்பொழிவிற்காக வாங்க என அழைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில இந்து கடவுள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு 'நான் அவருடைய வழித்தோன்றல்; அவருடைய மறுபிறவி என்னிடம் வந்து தகவலை கேட்டு ஆசிபெற்றுக் கொண்டால் உங்களுக்கு நல்லது நடக்கும்' என்று சொல்லி தான் மக்களை சொற்பொழிவு கூட்டத்திற்கு சேர்த்துள்ளார் போலெ பாபா. ஆனால் தற்பொழுது வரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய நபரான போலெ பாபா மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுபுறம் போலே பாபா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள போலெ பாபாவை தேடிவருகிறோம் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.