Skip to main content

அம்பேத்கர், காந்தி குறித்துப் பேசிய ஜான்வி கபூர் - இணையத்தில் வைரல்

Published on 25/05/2024 | Edited on 27/05/2024
janhvi kapoor about ambedkar gandhi

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தென்னிந்திய சினிமாவில், ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படம் மூலம் அறிமுகமாகிறார். தமிழில் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடாதப் படத்தில் கதாநாயகியாக நடிக்கப் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தகவல் உலா வருகிறது.  

இந்த நிலையில் இந்தியில் அவர் நடித்துள்ள ‘மிஸ் அண்ட் மிஸஸ் மஹி’ படம் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையபடுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாகவுள்ளார். அந்த வகையில் சமீபத்திய ஊடகப் பேட்டி ஒன்றில் பேசிய ஜான்வி கபூர், அம்பேத்கர் மற்றும் காந்தி குறித்து பேசியுள்ளார். அந்தப் பேட்டியில், நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து வந்த ஜான்வி கபூர், தனக்கு வரலாற்றில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகக் கூறினார். உடனே அந்த நெறியாளர், வரலாற்றில் எந்த காலகட்டத்திற்கு திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜான்வி கபூர், “நான் நேர்மையாக பதிலளிப்பேன். ஆனால் என்னுடைய கருத்தை யாருடனும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய பார்வை பார்வையாளர்களுடன் பொருந்தாமல் போகலாம்” என்றார். 

பிறகு பதிலளிக்க தொடங்கிய ஜான்வி கபூர், “தேசத் தந்தை மகாத்மா காந்தி மற்றும் இந்திய அரசியலமைப் தந்தை பி.ஆர்.அம்பேத்கர் இருவரும் சாதி பற்றி விவாதிப்பதைப் பார்க்க ஆசைப் படுகிறேன். இருவரும் இந்தியச் சமூகத்தை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். அவர்களின் சித்தாந்தங்களுக்கிடையேயான உரையாடலையும், பல்வேறு தலைப்புகளில் அவர்களின் எண்ணங்கள் எவ்வாறு உருவாகின என்பதையும் பார்க்க விரும்புகிறேன். அம்பேத்கர் சாதிக் குறித்தான தனது நிலைப்பாட்டில், ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் காந்தி சாதிக் குறித்து தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள அவரது நிலைப்பாடு பரிணமித்துக் கொண்டே இருக்கிறது. நம் சமூகத்தில் இருக்கும் இந்தச் சாதிய பிரச்சினை மூன்றாம் நபரிடமிருந்து கேட்பதற்கும் சாதிப் பிரச்சனைகளை சந்தித்து வாழ்பவர்களின் வழியாக கேட்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது” என்றார்.  

பின்பு அவரிடம் “உங்கள் பள்ளியில் சாதி குறித்து விவாதம் நடக்குமா?” என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் இல்லை எனப் பதிலளித்த அவர், பள்ளியில் மட்டுமல்ல, எனது வீட்டிலும் கூட அது தொடர்பான விவாதம் நடந்தது கிடையாது என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்