
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவந்த தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (13.09.2021) நிறைவு பெறுகிறது. நடப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் புதிதாக 10 காவல் நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். அண்ணா பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அன்று 700 ஆயுள் தண்டனை சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூபாய் 275 கோடியில், 896 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும். மெரினாவில் மக்கள் நீரில் மூழ்கி இறப்பதைத் தடுக்க 12 மீனவர்களுடன் உயிர்காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும். சைபர் குற்றத்தைத் தடுக்க மாநில இணையதளக் குற்றப் புலனாய்வு மையம் சென்னையில் அமைக்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளைக் காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க செயலி உருவாக்கப்படும். பொதுமக்கள் காவல் அதிகாரிகளை காணொளியில் சந்தித்து புகாரளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும். காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம். காவலர்கள் மாவட்டங்களுக்குள் இலவசமாக பயணம் செய்ய நவீன அடையாள அட்டை வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். ரூபாய் 6,000 கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். நீட் தேர்வு, டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்" என்று அறிவித்தார்.