
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (26/08/2021) பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்து பேசினார்.
அதைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "கலசப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கோரிக்கையை ஏற்று, திருவண்ணாமலையின் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் பெயர் கலைஞர் கருணாநிதி என மாற்றப்படும். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, திருக்கோவிலூரில் புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும். தருமபுரி மாவட்டம், ஏரியூரில் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும். ஒட்டன்சத்திரம், ஆலங்குடி, தாராபுரத்திலும் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும். அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் நாளைக்குள் (26/08/2021) வெளியிடப்படும்" என்று அறிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஜெ. மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை; அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது. எழுத்தார்வத்தை ஊக்குவிக்க குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும். ஆண்டுதோறும் 18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில் மூன்று சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது மற்றும் ரூபாய் 25,000 வழங்கப்படும். சிறந்த ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது ஆண்டுதோறும் தரப்படும். ‘திசைதோறும் திராவிடம்’ என்ற பெயரில் சிறந்த தமிழ் நூல்கள் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.
கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு ஆசிரியர்களுக்குப் பொதுமாறுதல் வெளிப்படையாக நடத்தப்படும். சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம் ரூபாய் 3.20 கோடியில் மேம்படுத்தப்படும். அனைத்து நூலகங்களிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் 2.40 கோடியில் மின் நூலகம் அமைக்கப்படும். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நடத்த பரிசீலனை செய்யப்படும். பள்ளி முடிந்த பிறகு, 6, 7, 8 வகுப்புகளுக்கு அரைமணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நடத்த பரிசீலனை செய்யப்படும்." இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.
இதனிடையே, சட்டப்பேரவையில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, "அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு கலைஞர் கருணாநிதி என மாற்றப்படும் என அறிவித்ததற்கு, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.