தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினருடன் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் சேர்ந்து தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். ஹெலிகாப்படரிலும் மீட்பு பணி நடந்தது.
முதற்கட்டமாக 12 பேர் மீட்கபட்டனர். இந்த நிலையில் குரங்கணி மலையில் காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 10 பேருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இந்நிலையில் குரங்கணி மலை பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகளை நேரில் கண்காணிக்க 4 ஐ.ஏ,.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காட்டுத் தீயில் சிக்கி படுகாயம் அடைந்த 3 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலக்கியா, சபிதா, சுவேதா ஆகிய 3 பேர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் பலத்த காயம் அடைந்தவர்களை மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் தீக்காயத்திற்கு என தனிப்பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக நிஷா என்ற மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.