Skip to main content

புகை மண்டலமாக மாறிய பேருந்து நிலையம்; அச்சமடைந்த மக்கள்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
sudden fire broke out in the old municipal building in Thuraiyur
கோப்புப்படம்

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே பழைய நகராட்சி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் வடபுறத்தில் உள்ள அறையில் தூய்மைப் பணிகளுக்கான தளவாடப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இரவு 9 மணியளவில் திடீரென தளவாடப் பொருட்கள் இருந்த அறையிலிருந்து புகை வெளிவரத் தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் பழைய நகராட்சி வளாகத்தில் கொசு மருந்து அடித்திருக்கலாம் எனக் கருதியபடி இருந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

அங்கு சென்று பார்த்தபொழுது அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் துறையூர் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடினர். அதற்குள் தூய்மைப் பணிகளுக்கான தளவாடப் பொருட்கள், தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் கையுறைகள், முகக் கவசங்கள், ப்ளீச்சிங் பவுடர், மூட்டைகள் என எல்லாவற்றிலும் தீ மளமளவெனப் பரவியது.

மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பழைய நகராட்சி கட்டடத்தில் நடந்த திடீர் தீ விபத்தில், பேருந்து நிலையம் முழுவதும் புகை பரவிப் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு தீயணைக்கும் பணி நடைபெற்றது.

சார்ந்த செய்திகள்