
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனை தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ‘மிக்ஜம்’ புயல் உருவாகவுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து, காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக பொதுமக்கள் தேவையின்றி பயணம் செய்ய வேண்டாம் என்றும் வெளியே வர வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது இந்நிலையில், போதிய பயணிகள் இல்லாததால் டெல்லி, பெங்களூரு, கவுகாத்தி, விஜயவாடா உள்ளிட்ட 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளில் சென்னையில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் என 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, சர்வதேச விமானங்கள் உட்பட 16 புறப்பாடு விமானங்கள், 12 வருகை விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் தாமதமாக இயக்கப்படவுள்ளது. அதில், பஹ்ரைன், துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர், தோஹா செல்லும் விமானங்கள் 4 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படவுள்ளது. அதனால், சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிப்பவர்கள் முன்னதாகவே வந்தடைந்து செக்-இன் செயல்முறைகளை முடித்து தயாராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.