தமிழகத்தில் இன்னும் 10 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீயாக வேலை செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தை காணொளி காட்சி வாயிலாக மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, " இந்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு நம்முடைய ஆட்சி அமைந்த பிறகு என்னென்ன செய்தோம் என்று பெருமையாக சொல்ல நம்மிடம் ஏராளமான தரவுகள் இருக்கிறது. ஆனால் இத்தனை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுகவிடம் அப்படி ஏதேனும் கூற தரவுகள் இருக்கிறதா? மக்கள் நலனை மறந்த அவர்கள் திமுக அரசு எதையும் செய்யவில்லை என்று பொய் தகவல்களை தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
குறிப்பாக பச்சைப் பொய். பழனிசாமி போகும் இடங்களில் எல்லாம் இதையே அச்சு மாறாமல் கூறி வருகிறார். இவர்கள் மக்களைப் பற்றி பேச தகுதியில்லாதவர்கள். தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்தவர்கள். நீட் விவகாரத்தை பொறுத்த வரையில் அது பலிபீடம் என்று நான் கூறியது மிகச் சரியான ஒன்று. மாணவர்களின் உயிரோடு விளையாடும் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டி திமுக அரசு தொடர்ந்து போராடி வருகிறது. நீட் விலக்கு விவகாரத்தில் தமிழக பாஜக இன்றளவும் பாடம் கற்கவில்லை. அதனால் தான் அவர்கள் தவறான தகவல்களை தொடர்ந்து கூறி வருகிறார்கள். திமுக அரசை குறைசொல்லும் இரண்டு அதிமுக தலைவர்களை பார்த்தால் “யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ளேவை கதைத்தான் நினைவுக்கு வருகிறது" என்றார்.