திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் பாதாளச் சாக்கடை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனையடுத்து ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி மற்றும் ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று (10.11.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி காலை முதல் மதியம் வரை பல்வேறு இடங்களில் நீதிபதிகள் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆற்றின் நீரைப் பரிசோதனைக்காக நீதிபதிகள் சேகரித்துக் கொண்டனர்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாகத் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் அனைத்து கழிவு நீர், பாதாளச் சாக்கடை கழிவுநீர்கள் அனைத்தும் மொத்தமாக ராமையன்பட்டி என்ற இடத்திற்குக் கொண்டுவரப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்டு அதன் பின்னர் அந்த நீர் வெளியிடப்படுகிறது. இதனையும் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வை முடித்துவிட்டு நீதிபதிகள் கிளம்பியபோது, நீதிபதிகளின் காரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், “இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தால் இப்பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நோய் ஏற்படுகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மழைக்காலங்களில் அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியை அகற்ற வேண்டும். அல்லது குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நீதிபதிகள் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த உத்தரவில், “தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றைத் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் முழுமையாகக் கலப்பதைத் தடுக்க தேவைப்படும் நிதி, கால அளவு, இதற்கான செயல் திட்டத்தின் விவரம் ஆகியவை அடங்கிய அறிக்கையை ஒரு வாரக் காலத்திற்குள் வழங்கத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.