திருவண்ணாமலை நகரத்தில் அக்டோபர் 16- ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரை 5 நாட்கள் உலக திரைப்பட விழா நடைபெறுகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்தும், இந்த விழாவில் ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, ஹங்கேரி என 12 நாடுகளை சேர்ந்த 22 திரைப்படங்கள் திரையிடவுள்ளனர்.
இது தொடர்பாக அக்டோபர் 14- ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் சங்கத்தின் மாநில துணைபொதுச்செயலாளர் கருணா பேசும் போது, உலக திரைப்பட விழாக்கள் என்பது சென்னை, மும்பை, கோவா, திருவனந்தபுரம் என பெரும் நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. அதனை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் கம்பம், பட்டுக்கோட்டை, திருப்பூர் போன்ற நகரங்களில் நடத்த துவங்கியுள்ளோம்.
இந்த வருடம் திருவண்ணாமலையில் நடைபெறும், விழாவிற்கு டிக்கெட் கிடையாது. நன்கொடை மட்டும் பெறுகிறோம். 5 நாட்கள் 22 காட்சிகள் காண 1000 ரூபாயும், ஒருநாள் மட்டும் காண 200 ரூபாயும், ஒரு படம் மட்டும் காண 50 ரூபாய் நன்கொடையாக பெறவுள்ளோம். திரைப்படம் முடிந்தபின் ஒவ்வொரு நாளும் ஒரு திரைப்பிரபலம், திரைப்பட எழுத்தாளர் வருவார்கள், அவர்களுடன் பார்வையாளர்கள் உரையாடல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த 22 திரைப்படங்களில் டூலெட் என்கிற ஒரு தமிழ் படமும் திரையிடப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விழாவினை தொடங்கி வைக்கிறார். விழாவில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துக்கொள்கிறார்கள் என அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலாஜி, பொருளாளர் செந்தில்குமார், வரவேற்பு குழு தலைவர் குழந்தைவேலு ஆகியோர் உடனிருந்தனர்.
ஒருபுறம் புத்தக கண்காட்சி, மற்றொரு புறம் உலக திரைப்பட விழா என கலைக்கட்டியுள்ளது திருவண்ணாமலை. அதேபோல் இந்த நிகழ்ச்சிக்கு இலக்கிய, கலை ஆர்வலர்களை பெரிதும் கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றுள்ளது.