நடிகர் டெல்லி கணேஷ் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர். ரஜினி, கமல் முதல் இன்றைய தலைமுறை முன்னணி ஹீரோக்களுடைய படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக அண்மைக்காலமாக அதிகமாகப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தாலும் கடந்த வருடம் ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது இரவு வீட்டில் நேற்று (09.10.2024) உறங்கிக் கொண்டிருந்தபோது உறக்கத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான டெல்லி கணேஷ் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து முத்திரை பதித்தவர். குறிப்பாக கமல்ஹாசன் திரைப்படங்களில் இவருக்கென ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் அமைந்திருக்கும். நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் மீது குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு நடிப்புத் திறமை கொண்டவர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் கொண்டு வந்த தனித்துவத்திற்காகத் தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களால் அவர் அன்புடன் நினைவுகூரப்படுவார். நாடக கலையின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தர். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.