
நெல்லை மாவட்டத்தின் அருவிகளின் நகரமான குற்றாலத்தில் வருடம் தோறும் அருவிச் சீசன் காலங்களில் அங்குள்ள அரசு கலைவாணர் அரங்கில் நடைபெறும் சாரல் விழா ஒரு வாரம் வரை நடக்கும். மாலையில் அன்றாடம் கலை நிகழ்ச்சிகள், பண்பாட்டு நடனங்கள் பாரம்பரியக் கலைகள் என விழா களை கட்டுவது வழக்கம் ஆனால் சாரல் விழா என்று பெயர் கொண்டாலும், இதற்கு முன்பு நடத்தப்பட்ட சாரல் விழாக்களில் கூடிய மட்டிலும் சாரல் இருக்காது மிஸ்ஸாகி விடும்.

ஆனாலும் வாராத மாமணியாய் இயற்கையின் அருட்கொடை ஆறு வருடங்களுக்குப் பின்பு இந்த வருடம் தாராளமாக குற்றாலப் பகுதிக்குக் கொடையைக் கொடுத்தது. சீசன் ஆரம்பகாலமான மே மாதம் தொடங்கி தற்போது வரை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.


அரசு வழக்கப்படி ஒருவார விழாவாக நடத்தப்படும் சாரல் விழா ஜூலை 28 அன்று தொடங்கப்பட்டது அமைச்சர்கள் கடம்பூர்ராஜ், வெல்லமண்டி நடராஜன், ராஜலட்சுமி மற்றும் எம்.எல்.ஏ.கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சாரல் விழாவில் மாவட்ட ஆட்சியரான ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டு வரவேற்றார். தமிழர்களின் கலை, பண்பாடுகளை எழுத்துரைக்கும் வகையிலான, பாதநாட்டியங்கள், கைத்தறிச் சேலைகளணிந்த கல்லூரி மாணவிகளின் கலக்கல் நடனங்கள், கொழு கொழு குழந்தைகளின் அணி வகுப்பு போட்டிகள், சிறு குழந்தைகளின் வர்ண ஒவியம், மற்றும் கோலப் போட்டிகள் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என்று அன்றாடத் நடந்த கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர் வியந்தனர்.
ஏழு நாட்களாக நடந்த சாரல் விழா பண்பாட்டு நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்