கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி வேலூரில் 110 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, வேலூர், மதுரை விமான நிலையம் ஆகிய பகுதிகளில் 108 டிகிரி பாரன்ஹீட்டும், திருத்தணி, திருப்பத்தூரில் 107 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
வெயில் கொடுமை காரணமாக வனவிலங்குகள் கிராமங்களுக்குள் படையெடுக்கும் நிகழ்வுகளும் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் கோவையில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால் விரக்தியடைந்த பொதுமக்கள் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதமாக மழை பெய்யவில்லை. மேலும் தற்போது கடும் கோடை வெயில் வீசி வருவதால் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். அதன்படி இரண்டு கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.