சேலத்தில், நடிகர் ரஜினிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் மாநகர காவல்துறையில் சனிக்கிழமை புகார் மனு அளித்துள்ளனர்.
அண்மையில் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து சில கருத்துகளை வெளியிட்டார். இதற்கு திக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராடி வருகின்றன.
இந்நிலையில் சேலத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பழனிவேல் தலைமையில் திரண்டு வந்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரிடம் சனிக்கிழமை (ஜன. 25) ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு விழாவில், பெரியார் பற்றி பேசினார். இதற்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ரஜினியைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சர்ச்சைக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, அவருடைய வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லி விட்டார்.
போராட்டத்தில் ஈடுபடுவோர், ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால், அவருடைய படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று போராடுவோம் என்றும், அவர் நடித்த படம் வெளியாகாத வகையில் தடை கேட்டு வழக்கு தொடர்வோம் என்றும், தகாத வார்த்தைகளால் மிரட்டி வருகின்றனர்.
உண்மையில், நடிகர் ரஜினி பெரியார் பற்றி அவதூறாக எதுவும் பேசவில்லை. பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில்தான் அவர் பேசினார். எனவே ரஜினிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் தடுக்க அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.