Skip to main content

நீச்சல் மட்டுமல்ல நடனமும் தெரியும்! - பள்ளி நிகழ்ச்சியில் அசத்திய ராகுல்!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

rahul gandhi

 

மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி, தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராகுல் காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த போது அரசியல் கூட்டங்களில் மட்டுமில்லாமல், சில பள்ளி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். அதேபோல் தமிழகத்தில் இன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த அவர், அங்குள்ள தனியார் பள்ளிக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

 

ராகுல் காந்தியை அப்பள்ளி மாணவர்கள், வழுக்கு மரத்தில் சாகசம் செய்து வரவேற்றனர். அதன்பிறகு ராகுல் காந்தி அப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அக்கிடோவில் கறுப்பு பெல்ட் பெற்றவரான ராகுல் காந்தி, அங்கு ஒரு மாணவருக்கு அக்கிடோவில் கலையைச் செய்து காட்டினார். அதன்பிறகு 10-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி மெரோலின் ஷெனிகாவின் சவாலை ஏற்று, அவரோடு புஷ்-அப் செய்தார். மேலும் பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.

 

இதனையடுத்து அங்கு பேசிய அவர், இந்தியாவிற்கு இன்னொரு சுதந்திரப் போராட்டம் தேவை எனக் கூறினார். ராகுல் காந்தி பேசியது பின்வருமாறு:

 

ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும், அவர்கள் விரும்புவதைக் கேட்காமல் செய்யப்படும் எந்தவொரு கொள்கையும் கல்விக்குப் பயனளிக்கும் கொள்கையாக இருக்கப்போவதில்லை. நீட் பிரச்சினை இங்கே ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அது நிறைய இளைஞர்களை, தங்கள் கனவுகளை அடைவதிலிருந்து தடுக்கிறது. எனவே அது பயனளிக்காது.

 

பிரதமர் மோடி அவர்களே, இந்தியா வெவ்வேறு கருத்துகள், மொழிகள், மதங்கள் மற்றும் பார்வைகளையும் கொண்டுள்ளது. எல்லா யோசனைகளும் உங்களிடமிருந்து வர வேண்டும் என்று நீங்கள் ஏன் உறுதியாக நம்புகிறீர்கள்? இந்திய மக்களை நீங்கள் ஏன் கேட்கவில்லை? மக்கள் விரும்புவதை நீங்கள் ஏன் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை?

 

இந்தியாவுக்கு இப்போது தேவைப்படுவது மற்றொரு விடுதலைப் போராட்டம். ஆனால் அது அகிம்சை மற்றும் பாசத்தோடு இருக்க வேண்டும். இந்தியாவில் கோபமும் பயமும் நிறைய பரவியிருக்கிறது. அதற்கு எதிராகத்தான் நாம் போராடி, மீண்டும் இந்தியாவை மகிழ்ச்சியாகவும், வசதியாகவும், அச்சமற்றதாகவும், ஒற்றுமையாகவும் மாற்ற வேண்டும். 

 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, வரலாற்றில் அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றியது. துரதிர்ஷ்டவசமாக, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கரோனா ஆகியவை அந்த மக்களை மீண்டும் வறுமையில் தள்ளியுள்ளது. இந்தியாவில் வறுமை மீது இறுதித் தாக்குதலை, 'நியாய்' மூலம் எவ்வாறு செய்வது என்பது குறித்து எங்களுக்கு நல்ல யோசனை உள்ளது. 'நியாய்' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஏழை இந்திய குடும்பத்திற்கும், ஒவ்வொரு ஆண்டும், அவர்கள் வறுமையிலிருந்து வெளியேறும் வரை 72,000 ருபாய் வழங்குவதற்கான திட்டதை, நாங்கள் அரசமைத்தால் செயல்படுத்துவோம். இதன்மூலம் 5-6 ஆண்டுகளில், வறுமையை முற்றிலுமாக ஒழிப்போம். இந்தியாவுக்குப் பணப் பற்றாக்குறை இல்லை. இந்தியாவின் பிரச்சனை பணம் விநியோகிக்கப்படும் விதம். 'நியாய்' திட்டம் இந்தியாவில் நியாயமற்ற வருமான விநியோகத்தைக் குறைக்கும்

 

நாட்டிலுள்ள பணக்காரர்கள், ஏழ்மையான மக்களை விட மிகக் குறைந்த விகிதத்தில் வங்கிக் கடனைப் பெற முடியும். ஆமாம், ஏழைகளுக்கு நிதி பற்றி புரிந்துகொள்ள நாம் உதவ வேண்டும். ஆனால் அதேசமயம், இந்த அமைப்பு ஏழை மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்" இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

இன்று பள்ளி மாணவர்களுடன் அசத்திய ராகுல், சமீபத்தில் கேரள மீனவர்களுடன் கடலில் இறங்கி நீச்சல் அடித்ததும் வைரலாகியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
When the election comes PM Modi will love the people CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார்.