ஈரோடு மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வைக்கைவிட வேண்டுமென ஈரோடு வரி செலுத்துவோர் சங்கம் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்கங்களின் சார்பில் இன்று ஈரோடு பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
அவர்களின் கோரிக்கைகளில் தமிழக அரசு வீட்டுக்கு 50 சதவீதமும், கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரியை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வரி உயர்வு என்பது ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மட்டும் இருக்க வேண்டும். சொத்து வரியுடன் குப்பை வரியையும் சேர்த்து வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
மேலும் நகரில் சீரான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். சுமார் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைகளை புதை சாக்கடைத்திட்டத்துக்காக மீண்டும் மீண்டும் தோண்டி ஏராளமான செலவு செய்வதை நிறுத்த வேண்டும்.
ஈரோடு மாநகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுமையாகச்செயல்பாட்டுக்கு வந்த பிறகு இணைப்புக்கொடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று உயர் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு அனுப்ப இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கையெழுத்து போராட்டத்தில் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ராதாமணி பாரதி தலைமையில் ஏராளமானோர் பங்குபெற்றனர்.