
அண்மையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “பா.ம.க தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். இன்றைக்குத்தான் நான் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி நிறுவனர் பிளஸ் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் கூடிப் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. அதை இங்கே சொல்ல முடியாது” என தெரிவித்திருந்தார்.
ராமதாஸின் முடிவுக்கு பாமக பொருளாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம்' என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பாமக பொருளாளர் திலக பாமாவை நோய் கிருமி என பாமக பொதுச்செயலாளர் விமர்சித்து நேற்று இதுகுறித்து பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாட்டாளி மக்கள் கட்சியின் அண்மை நிகழ்வுகள் பற்றிக் கட்சியின் பொருளாளராக இருக்கும் திருவாட்டி.திலகபாமா என்பார் கூறுகையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எல்லா நிலைகளிலும் சரியான முடிவெடுத்துச் சரியான செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவார். இப்போது தவறான முடிவெடுத்து இருக்கிறார். இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்று சிறிதும் பொருளற்ற முறையில் சிறுபிள்ளைத் தனமாக ராமதாஸ் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பா.ம.க.வின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர்.
திலகபாமா பாட்டாளி மக்களின் தோழர் அல்லர். மேட்டுக்குடியினம். பெண்களுக்குத் தலைமையில், அதுவும் பொருளாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அய்யாவின் பரிந்துரையிலும், ஆதரவிலும் பதவி பெற்றவர். பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பாடுபட்டு வந்த பாட்டாளி சொந்தங்களை விரட்டி அடித்தவர். உடனிருந்தே கொள்ளும் நோய் இவர். அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி' என காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் முகநூல் பக்கத்தில் ஒற்றை வரியில் பாமக பொருளாளர் திலகபாமா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'உடன்படா கருத்தையும் உரைக்கின்ற உன் உரிமையை உயிரைத் தந்தேனும் காப்பேன்' என தெரிவித்துள்ளார்.