டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஓமந்தூரார் மருத்துவமனையில் மாநில அளவிலான கூட்டம் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககந்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “டெங்கு, மலேரியா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். கேரளாவில் நிஃபா வைரஸ் பரவல் எதிரொலியாக எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூரில் உயிரிழந்த பயிற்சி பெண் மருத்துவருக்கு டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்பு இல்லை. டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொசு ஒழிப்புக்கான மருந்துகள் அனைத்தும் போதிய அளவில் அரசிடம் இருப்பு உள்ளது” என தெரிவித்தார்.