
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட நெக்னாமலை கிராமத்தில் 170க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 450 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கிராமத்தில் வசிக்கும் மார்க்கபந்து, சிவகுமார், வஞ்ஜிரம், ஆகியோரின் மூன்று குடும்பங்களை ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா முருகன் மற்றும் ஊர் நிர்வாகிகளான காசி, வேலுமணி, முருகேசன் உள்ளிட்ட சிலர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
காளியம்மன் கோயில் பணம் பல லட்ச ரூபாயை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகிகள் கையாடல் செய்ததாகவும், அது குறித்து மார்க்கபந்து கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் எங்கள் கட்சிதான்(திமுக) ஆளும் கட்சியாக இருக்கிறது. நாங்கள் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்று கூறிய ஊராட்சி மன்ற தலைவரும் நிர்வாகிகளும், மார்கப்பந்து, சிவகுமார், வஞ்ஜிரம் ஆகிய மூவரின் குடும்பத்தையும் கடந்த 10 நாட்களாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய மார்கப்பந்து, எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். திருவிழாவின் போது கோயில் அருகே கூட வரக்கூடாது என்றும், தண்டல் கொடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். அத்துடன் எங்களுடன் யார் பேசினாலும் அவர்களுக்கு ரூ.1000 முதல் 10,000 ஆயிரம் வரை அபராதம் விதித்துள்ளனர். மீறினால், எங்களை போன்று அவர்கள் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்து விடுவதாக மிரட்டுகின்றனர். ஆளும் கட்சி என்பதால் எதற்கெடுத்தாலும் மிரட்டி வருகின்றனர் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசும் போது, “சிவகுமாரின் விவசாய நிலத்தில் அத்துமீறி வழி அமைத்து சில அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தட்டிக் கேட்டால், ஊருக்கே வழி விடாத நீங்கள், இந்த விழியில் வரக்கூடாது வீட்டிலேயே இருங்கள் என்று மிரட்டுகின்றனர். இதனால் தங்களால் வெளியே சென்று குடிநீர் எடுத்து வரக் கூட செல்ல முடியவில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகிகள் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து நாங்கள் சொல்வதை மீறிச் செயல்பட்டால் கொலை செய்யக் கூட தயங்க மாட்டோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர்.