மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 85 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். முதியவரின் இறப்பிற்கு காரணம் மருத்துவமனை நிர்வாகம்தான் என்று கூறி அவருடைய உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதலை நடத்தியதாகவும், இந்த தாக்குதலுக்கு ஆளான இரண்டு மருத்துவர்கள் உயிருக்குபோராடிய நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து தேசிய அளவில் இந்திய மருத்துவ சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவித்தனர். இதனால் ஜூன் 17 காலை 6 மணி முதல் ஜூன் 18 காலை 6 மணி வரை இன்று ஒருநாள் மட்டும் அனைத்து புறநோயாளிகள் பிரிவு செயல்படாது என்றும், அவசர பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் மருத்துவர்கள் கூறும் போது.. மருத்துவமனைகள், மருத்துவர்களுக்கும், மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறி ஆகிவிட்டது. மருத்துவ மையங்களையும், மருத்துவ ஊழியர்களையும் பாதுகாக்க தேசிய அளவில் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.
இந்த நேரத்தில் இந்திய அளவில் மருத்துவ அமைப்புகளுக்கான பாதுகாப்பு முறைகள் வகுக்கப் படவேண்டும். மருத்துவ மையங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பை அந்தந்த மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இந்த மாதிரியான வன்முறைகள் தொடர்ந்தால் மருத்துவ ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்றனர்.
இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் இணைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் தர்ணாபோராட்டம் நடத்தினார்கள். இதில் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளையின் தலைவர் மருத்துவர் சுரேஷ்குமார் மற்றும் செயலாளர் மருத்துவர் கே.எச். சலீம் மற்றும் அரசு மருத்துவ சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஏராளமான தனியார் மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தனியார் ஆய்வகங்கள், பல்மருத்துவம் மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.