Skip to main content

என்.எல்.சி சுரங்க மண் சரிவினால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு   விவசாயிகள் முற்றுகை!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் தோண்டப்பட்ட மண்ணானது மலைபோல் பல்வேறு கிராமங்களில் உள்ள விளைநிலங்களின் அருகே  குவிக்கப்பட்டுள்ளது.  அவ்வப்போது  பெய்து வரும் மழையின் போது மண் மேட்டில் உள்ள மண் கரைந்து விவசாய நிலங்களுக்குச் சென்று படர்ந்து விடுவதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

nlc


இதுகுறித்து என்.எல்.சி நிர்வாகத்திடமும்,  மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை தெரிவித்தும் மாற்று வழிகள் செய்யாமலும்,  உரிய இழப்பீடு வழங்காமலும் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இம்மண் மேட்டினால் பாதிக்கப்பட்ட கொம்பாடிகுப்பம், அரசகுழி, ஊமங்கலம், பொண்ணாலகரம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை குறுக்கே நிறுத்தி, கைகளில் பதாகைகளை ஏந்திக் கொண்டு  கண்டன முழக்கங்கள் எழுப்பி இரண்டாவது சுரங்கம் செல்லும்  வாயிலின் முன்பு அமர்ந்து  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

nlc


இதுகுறித்து என்.எல்.சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கலையாமல் ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாச்சலம் வருவாய் வட்டாட்சியர் கவியரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, விவசாயிகள்  கோரிக்கைகள் குறித்து, கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும்  என்று கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

அதேசமயம் என்.எல்.சி நிர்வாகம் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்