சீர்காழி அருகே வீட்டின் பின்புறம் வைக்கோல் போரில் பதுக்கி வைத்திருந்த 1600 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்ததோடு, அதிமுக பெண் பிரமுகரையும் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடக்குடி வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சம்மாள், அதிமுக பிரமுகரான இவர் வைத்தீஸ்வரன்கோவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவராகவும் இருக்கிறார். இவரது வீட்டின் பின்புறம் உள்ள வைக்கோல் போரில் பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட சாராயம் 47 கேன்களில் 1600 லிட்டர் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்ட மத்திய புலனாய்வுத் துறை போலீசார் அதிரடியாக அஞ்சம்மாளின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் பின்புறம் உள்ள வைக்கோல் போரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய கேன்களையும், அஞ்சம்மாளையும் கைது செய்து சீர்காழி மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். சாராயம் கடத்தி வந்த பாண்டிச்சேரியை சேர்ந்த குமார் மற்றும் மனோ ஆகியோர் தப்பித்து விட்டனர்.

நாகை மாவட்ட போலீசார் சாராய விற்பனையை கண்டுகொள்ளாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள், அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.