Skip to main content

“பத்து நாளைக்குத்தான ஆடுவ! அப்புறம் என்ன பண்ணுறேன் பாரு!” - தேர்தல் பறக்கும் படையை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு!

Published on 12/03/2021 | Edited on 13/03/2021

 

MINISTER KADAMBUR RAJU ELECTION SQUAD TEAM

 

என்னதான் அரசு அலுவலர்கள் என்றாலும், பலரும் அமைச்சர்களிடமும் ஆளும்கட்சியினரிடமும், பணிந்து நடந்தே பழக்கப்பட்டவர்களாக உள்ளனர். தேர்தல் பணியாற்றும்போது, நேர்மையான அரசு அலுவலர்கள், இழந்த கம்பீரத்தை மீட்டு, தேர்தல் அலுவலர்களாக சுதந்திரமாகப் பணியாற்றுவார்கள். ஆளும்கட்சியினரோ, ‘இதுநாள் வரையிலும், தங்களின் முன்னால் கைகட்டி, வாய்ப்பொத்தி பணியாற்றியவர்களுக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்?’ என்று  தேர்தல் அலுவலர்களிடம், அதிகார தோரணையிலேயே நடந்துகொள்வர்.


கோவில்பட்டி தொகுதியில், தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு  ‘டஃப்’ கொடுக்கும் விஐபி வேட்பாளராக இருக்கிறார், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இந்தப் போட்டியால் சதா டென்ஷனாகவே இருக்கும் கடம்பூர் ராஜு, தேர்தல் அதிகாரிகளின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காமல், ஒருமையில் பேசி சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால், அவர் மீது நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

 

அமைச்சர் ஏன் ஆத்திரப்பட்டாராம்?


இன்று (12-ஆம் தேதி) ஊத்துப்பட்டி விலக்கு அருகே, தேர்தல் பணியாற்றும் பறக்கும்படை குழு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியில் தனது காரில் அமைச்சர் கடம்பூர் ராஜு வந்திருக்கிறார். அவருடன் ஆளும்கட்சியினரும், தங்களின் கார்களில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். ‘அமைச்சராக இருந்தாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்தானே!’ என, விதிமுறைகளின்படி மேற்கண்ட மூன்று வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். 

 

அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு வந்ததே கோபம்! காரிலிருந்து இறங்கி ‘இன்னும் பத்து நாளைக்குத்தான் நீ ஆடுவ.. அதுக்குப்பிறகு உன்னை என்ன பண்ணுறேன் பாரு..’ என்று பறக்கும்படை குழுத் தலைவரை மிரட்டியிருக்கிறார். அவரோ, ‘எங்கள் கடமையைத்தான் செய்கிறோம். ஒத்துழைப்பு கொடுங்க..’ எனப் பணிவாக விளக்கம் தர, அவர் பேசியதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், தொடர்ந்து ஒருமையில் பேசி அவமானப்படுத்தியிருக்கிறார். 

 

இந்தத் தொடர் மிரட்டலால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்தப் பறக்கும்படை குழுத் தலைவர், உயிர் பயத்தில் நாலாட்டின் புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் பெற,  அமைச்சர் கடம்பூர் ராஜுவை தொடர்புகொள்ள  தொடர்ந்து முயற்சித்தபோது, நீண்ட நேரத்துக்குப் பிறகு நம் லைனில் வந்தார். 

 

“வேட்பாளராக நான் சந்திக்கும் மூன்றாவது தேர்தல் இது. அதற்குமுன் பத்து தேர்தல்களில் வேலை பார்த்துவிட்டுத்தான் வேட்பாளராகவே ஆனேன். ஒரு அமைச்சராக இருந்துகொண்டு தேர்தல் பறக்கும்படையிடம் இப்படிப் பேசுவேனா? நடந்தது என்னவென்றால், என்னுடைய காரை சோதனையிட்டு முடித்த பிறகும் அனுப்பவில்லை. என்னுடன் வந்தவர்களின் கார்களை சோதனை செய்தபடி இருந்தனர். ‘சோதனைதான் முடிந்துவிட்டதே? என்னுடைய காரை அனுப்பலாமே?’ என்று கேட்டேன். வேறெதுவும் நடக்கவில்லை. சூழ்ச்சி எண்ணத்தோடு யாரோ தூண்டிவிட்டு புகார் அளித்திருக்கிறார்கள்.” என்றார். 

 

தேர்தல் பறக்கும்படை தரப்பிடம் அமைச்சர் கடம்பூர் ராஜு அளித்த விளக்கத்தைச் சொன்னபோது “ஒரு அமைச்சர் மீது பொய்ப்புகார் கொடுக்கும் அளவுக்கு அரசு ஊழியர் ஒருவருக்கு எப்படி தைரியம் வரும்? அமைச்சரின் மிரட்டலான பேச்சை பறக்கும்படை குழுவில் உள்ள அத்தனை பேரும் நேரடியாகவே கேட்டார்கள். தேர்தல் அலுவலர்களுக்கு ஒத்துழைக்காததே தேர்தல் விதிமீறல்தான். வாய்க்கு வந்ததைப் பேசிவிட்டு தற்போது சமாளிக்கப் பார்க்கிறார் அமைச்சர்.” என்றனர்.  

 

அரசு அலுவலர்களின் பணிக்காலம் எத்தனை வருடங்கள்? எத்தனை ஆண்டுகள் ஒருவரால் அமைச்சராக இருந்துவிட முடியும்? அதிகாரம் கண்ணை மறைத்துவிட, இந்தக் கணக்குகூட அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தெரியாதது, வேதனைதான்!

 

 

சார்ந்த செய்திகள்