உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2025ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு 249.76 கோடி ரூபாய் செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படவுள்ளன என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பொங்கல் தொகுப்பில் ரூ.1000 தரப்படாததற்கான காரணம் குறித்து அவர் பேசுகையில், “கடந்த ஆண்டு மட்டும் 2 இயற்கை இடர்ப்பாடுகளைச் சந்தித்தோம். மிக்ஜாம் புயல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.
கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளம், புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி மாநில நிதியிலிருந்து செலவிட்டிருக்கிறோம். மத்திய அரசிடம் ரூ. 37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே தந்தது. மத்திய அரசிடம் அதிகம் கேட்டாலும், சொற்பமாகத்தான் கிடைத்தது. இருப்பினும் அதற்கான நிதிச்சுமையைத் தமிழக அரசு ஏற்றது. தற்போது பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது. நல்ல சூழல் விரைவில் உருவாகும். அதோடு ஜனவரி மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1000ஐ பொங்கலுக்கு முன்பாக வழங்கப் பரிசீலிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, “கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ஜனவரி 1ஆம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ஆம் தேதி நடைபெறும். அதாவது டிசம்பர் 30, 31 என 2 நாட்கள் நிகழ்வுகள் நடைபெறும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கான வெள்ளி விழா 3 நாட்கள் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.