சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் இமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய், “அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பைம் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது நெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.. எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்போன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” என தனது கைப்பட எழுதிய கடிதத்தை வெளியிட்டு கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார்.
இதனையடுத்து விஜய் எழுதிய கடிதத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். அப்போது போலீசார் விஜய் எழுதிய கடிதத்தை பொது மக்களுக்கு விநியோகிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதனையும் மீறி இந்த கடிதத்தைக் தொண்டார்கள் விநியோகித்தால் அவர்களை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தொண்டர்களைப் பார்ப்பதற்காகச் சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்தையும் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து மண்டபத்திற்குள் த.வெ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விஜய், பொதுச்செயலாளர் மற்றும் தொண்டர்கள் கைதானது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது கட்சி எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை… pic.twitter.com/lAt8ovR4X3— TVK Vijay (@tvkvijayhq) December 30, 2024