சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது.
இத்தகைய சூழலில் தான் இந்த பாலியல் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்த அறிவித்து போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு போலீசார் அனுமதி தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஒன்று கூடி போராட்டம் நடத்த முயன்றனர். இதனையடுத்து நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். மேலும், கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னை பெரிய மேட்டில் உள்ள சமுதாயம் நலக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சீமான் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்கிக் கொண்டுள்ளது. தமிழக அரசு, பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான உரிமை கூடப் பெற்றுத் தர முடியவில்லை. பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவது எப்போது?. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். ஆயிரக்கணக்கான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படும் நிலையில், இதில் பாதிக்கப்பட்ட தங்கையின் முதல் தகவல் அறிக்கை மட்டும் வெளியானது எப்படி?. இந்த முதல் தகவல் அறிக்கை மட்டும் எப்படி டெக்னிக்கல் எரர் வருகிறது. தமிழ்நாட்டில் எந்த குற்றச்செயல்கள் நடந்தாலும் அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்கள் மட்டும் இயங்குவதில்லை ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.