உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்திலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. அதாவது இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்து மக்கள் 2024ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாக்கப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு பிறந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும் அங்குக் கூடியிருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து வண்ணமயமான, பிரமாண்ட வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. மேலும் கேக் வெட்டி, ஆட்டம், பாட்டம் எனப் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாகச் சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை (01.01.2025) கூடுகிறது. புதிய வருடத்தின் முதல் நாளில் மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.