
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, சிறப்பு கட்டண சலுகையை சென்னை மெட்ரோ நிர்வாகம் வழங்கியிருந்தது. அதன்படி, நாளை (03-12-23) ஒரு நாள் மட்டும் க்யூஆர் பயணச்சீட்டு ( paytm, phonepe, static QR) முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக ‘மிக்ஜம்’ புயல் மற்றும் கனமழை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகிருந்த நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால், மெட்ரோ பயணிகள் அதிகளவில் நாளை (03-12-23) பயணிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சிறப்பு கட்டண சலுகையை கூடுதலாக ஒரு நாள் நீட்டித்துள்ளது. அதன்படி, மெட்ரோ பயணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, அதிக பயணிகள் இந்த சிறப்பு கட்டணத்தில் பயணிக்க வருகின்ற 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.