கரூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார். பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள கட்டணம் மற்றும் கட்டணமில்லா கழிப்பிடங்களில் சுகாதாரம் மற்றும் நீர் வழித்தடங்கள் மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்த அவர், போதிய சுகாதாரமின்மை மற்றும் நீர் வழித்தடங்கள் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தள்ளுவண்டி கடைகளை உடனடியாக அகற்றவும், உணவகங்கள் மற்றும் பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து, கான்கிரீட் மேடைகள் அமைத்து சட்டவிரோதமாக செயல்படுவதை கண்ட மேயர் உடனடியாக அவற்றை இடித்து அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், உரிய பதில் அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.