கரோனா அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோவில் சம்பிரதாயப்படி உரிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி சாஸ்திர சம்பிரதாயபடி எளிமையாக நடைபெற்றது. திருக்கல்யாண விழா கோயில் சார்பில் இணையத்தளம் மூலம் நேரலையாக ஒளிபரப்பட்ட நிலையில் பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தரிசனம் செய்தனர் அப்போது திருமணமான பெண்கள் பதிய மங்கல நாணை வீட்டில் இருந்த படியே மாற்றிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை அருள்மிகு மீனட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, இந்த மாதம் 2, 3, 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் முறையே மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்விஜயம், மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேரோட்டம் ஆகியவை நடைபெற இருந்தது.
இந்நிலையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்படுவதாக மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் அறிவித்தது. எனினும் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு, சந்தேரஸ்வரர் திருமாங்கல்யம் அணிவிக்கும் திருக்கல்யாண வைபவ விழாவை சாஸ்திர சம்பிரதாயபடி எளிமையாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை சம்பிரதாயப்படி 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உள்ள சேத்தி மண்பத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் முறைப்படி நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரருடன் எழுந்தருள விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கி, புண்யாஹவாசனம், பஞ்ச கவ்யம், சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல், போன்றவை நடத்தப்பட்டு இன்று காலை 9.05 மணியில் இருந்து 9.29 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு சுந்தரேசுவரருக்கு மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்வு சிறப்புற நடத்தப்பட்டு திபாராதனை காட்டப்பட்டது.
திருக்கோயிலுக்குள் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் வருவதற்குத் தடை உள்ள நிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சிகளைத் திருக்கோயில் இணையத்தளம் மற்றும் முகநூல் பக்கத்திலும், திருக்கோயில் Youtube அலைவரிசையிலும் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே சுவாமியைப் பிரார்த்தித்து தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா முதன் முறையாக கரோனா தொற்றால் ரத்தானது பக்தர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தினாலும், மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது சற்று மனதிற்கு நிறைவு தருவதாகவே உள்ளது எனப் பக்தர்கள் தெரிவித்தனர். திருக்கல்யாணத்தைக் காண பல்லாயிரகணக்கான பக்தர்கள் குவியும் கோயில் இன்று கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.