Skip to main content

மக்களவைத் தேர்தல்; அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Lok Sabha elections; Order to transfer officers

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே சமயம் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்த அதிகாரிகள் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகப் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி மற்றும் அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்களவைத் தேர்தலையொட்டி ஏற்கனவே பணியாற்றிய தொகுதிக்குள் மீண்டும் பணியாற்றாதவாறு அரசு அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணி செய்த அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தலைமைத் தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாடாளுமன்றத் தேர்தல் 2024 தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினரை வாக்குச்சாவடி மையங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், வாக்காளர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் போன்றவைகளுக்காகவும் மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அவற்றுள் 15 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் 01.03.2024 அன்றும் 10 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் 07.03.2024 அன்றும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்