Skip to main content

“என்னுடைய இரண்டாவது அத்தியாயம்” - இந்தியன் 2 குறித்து பா.விஜய்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
pa vijay about indian 2 paaraa song success

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுப் போனது. பின்னர் மீண்டும் படப்பிடிப்பு நடந்து வந்தது. 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் இப்போது மறைந்து விட்டனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. 

மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் ஷங்கரும் கமல்ஹாசனும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ஆம் தேதி நடந்த ஐ.பி.எல். போட்டியில் கமல்ஹாசனும் ஷங்கரும் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் ‘பாரா’ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக பாடலின் வரிகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி, ராம் சரண், சிரஞ்சீவி கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில்  இப்படத்தின் முதல் பாடலான பாரா பாடல் வரவேற்பு குறித்து பாடலாசிரியர் பா.விஜய் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் எதிர்பர்த்தது மாதிரியே மிகப் பெரிய எழுச்சியையும் மகத்தான மகிழ்ச்சியையும் இந்தப் பாட்டு கொடுத்திருக்கு. இந்தப் பெரிய வெற்றியை கொடுத்த ஷங்கர் சாருக்கும் அனிருத்துக்கும் எனது மனப்பூர்வமான நன்றி. இன்னும் வெளிப்படையாக சொல்லப் போனால் திரைப்பாடல் உலகத்தில் இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ். இரண்டாவது அத்தியாத்தை இந்தப் பாட்டு ஆரம்பிச்சிருக்குன்னு சொல்லலாம். கிட்டதட்ட மூவாயிரம் பாடல்களை நான் எழுதி கடந்து போய்கொண்டிக்கேன். ஆனாலும் வீரத்துக்கான பாட்டு இதுவரை எழுதியதில்லை. தமிழ் மண்ணின் வீரத்துக்கான ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு இந்தியன் 2 வில் கிடைத்தது. இந்தப் பாடலுடைய வெற்றி, தமிழகம் கடந்து எல்லா பகுதிகளிலும் மிகப்பெரிய அலை அலையாகப் பெருகிவிட்டது” என்றார்.   

சார்ந்த செய்திகள்