நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் ஜூன் 4-க்கு பிறகுதான் அ.தி.மு.க.வில் பல வெடிச்சத்தங்கள் உருவாகக்கூடும் என்ற நிலையில், அதற்கு முன்பாகவே மாஜி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனைச் சுற்றி, "ரிசல்ட்டுக்குப் பிறகு கட்சி மாறுகிறார்... பா.ஜ.க. தலைமையோடு பேசிவிட்டார்... தமிழகத் தலைவர் பொறுப்பைக் கேட்கிறார்... எடப்பாடியோடு மோதல்' என்றெல்லாம் சூறாவளியாக பல்வேறு செய்திகள் சுழன்றடிக்கின்றன.

இவற்றில் உண்மை என்ன? பின்னணி என்னவென்று கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.

aa

கே.ஏ.செங்கோட்டையனைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். காலத்திலேயே 1977-ல் சத்தியமங்கலம் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கி முதல் வெற்றியைப் பெற்றவர். பத்து முறை எம்.எல்.ஏ.வாக வென்று தொடர்கிறார். எடப்பாடி பழனிச்சாமி உட்பட இப்போதுள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவருமே இவரது ஜூனியர்கள்தான்.

Advertisment

முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் நம்மிடம், "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா சிறைக்குச் செல்லும் முன் முதல்வர் தேர்வில் செங் கோட்டையன் பெயரையும் சசிகலா பரிசீலித்தார். அந்த சமயத்தில் செங்கோட்டையன் அவரது சொந்த ஊரிலுள்ள அவரது தோட்டத்தில், முதல்வர் பதவியை ஏற்கலாமா என்பது குறித்து நெருங்கிய உறவினர் களோடு ரகசிய கூட்டம் நடத்தினார். சிலர் ஏற்கலாமென்றும், பலர் வேண்டாமென்றும், எஞ்சியுள்ள நான்கு வருடங்கள் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும், சசிகலாவின் எடுபிடியாக உங்களைப் பார்க்கவேண்டிய நிலை சங்கடத்தை ஏற்படுத்தும், அதை வேறு யாரேனும் பார்க்கட்டு மென்று ஆலோசனை கூறி யுள்ளனர். செங்கோட்டை யனும் அதே முடிவிலிருந்தார். அவரைப் பொறுத்தவரை கட்சியில் உயர்பதவி வகிப்பது முக்கியமல்ல, இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற பெருமையே போதுமென நினைக்கிறார். 75 வயதை கடந்த நிலையில் இனியும் தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாதென்ற முடிவில் இருக்கிறார்'' என்றார்.

அ.தி.மு.க.வில் செங்கோட்டையனுக்கு எதிர் அரசியல் நடத்திய மாஜி ஒருவர் நம்மிடம், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தொடர்ந்து தனது இருப்பை செங்கோட்டையன் கட்சி யில் வைத்துக்கொண்டே வந்தார். இப்போதெல்லாம் அவர் கோஷ்டி அரசியல் செய்வதில்லை.

அவர்மீது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், செங்கோட்டையனைப் பொறுத்தவரை திராவிட இயக்கக் கொள்கைகளில் பிடிப்பு கொண்டவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் கருத்துக்களை மேடைதோறும் கூறுவார். அப்படிப்பட்ட செங்கோட்டையன் பா.ஜ.க.வுக்கு தாவுகிறார் என்று வந்த செய்தியை, அ.தி.மு.க. தொண்டர்களோ, பொதுமக்களோ நம்பமாட் டார்கள்'' என்றார்.

Advertisment

se

கொங்கு மண்டல அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர், "அண்ணன் செங்கோட்டையனுக்கு பதவி மீது ஆசையில்லை. கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாகி மக்களுக்கு சேவைசெய்ய மட்டுமே விரும்புகிறார். அதே போல் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோடும் எக்காலத்திலும் மோதல் இருந்ததில்லை. எடப்பாடி பழனிச்சாமியே நெருக்கடியான நேரத்தில் செங்கோட்டை யனிடம்தான் ஆலோசனை கேட்பார். எடப்பாடிக்கு நல்ல ஆலோசனை வழங்கக் கூடியவராகத்தான் செங்கோட்டையன் இருக்கிறார். செங்கோட்டையனை டம்மியாக்க நினைக்கும் ஒரு முன்னாள் அமைச்சரின் சதிதான் இதுபோல் பரப்பப்படும் பொய்ச் செய்திகள்'' என்றார்.

ஈரோடு அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ஒருவரோ, "ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகரீதியாக மூன்று மாவட்டங்களாக உள்ளது. ஒன்று ஈரோடு மாநகர் மாவட்டம் இதில் மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் வருகிறது. இதில் பவானி, பெருந்துறை சட்டமன்ற தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரான கே.சி.கருப்பண்ணன் இருக்கிறார். இவர் அவ்வப் போது செங்கோட்டையனோடு உரசல் போக்கைக் கடைபிடித்துவருகிறார். பவானி தொகுதியின் நிரந்தர எம்.எல்.ஏ. என்ற பெயர் தனக்கு இருக்க வேண்டுமென்று கருப்பண்ணன் விரும்புகிறார். மற்றொருபுறம் எடப்பாடி பழனிச்சாமி, கருப்பண்ணனுக்கு சம்பந்தி முறை நெருங்கிய சொந்தம். இதைப் பயன்படுத்தி தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன் பெயரும் வரவேண்டு மென்று அரசியல் காய்களை நகர்த்துகிறார் கருப்பண்ணன். அதற்கு செங்கோட்டையன் இடையூறு என நினைத்து அவரோடு முரண் படுகிறார். அதேபோல் இவரது எல்லைக்குள் வரக்கூடிய பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார், செங்கோட்டையனோடு இணக்க மாக இருப்பதும் பிடிக்காத தால் இப்படியான வதந்திகள் கிளம்புகின்றன'' என்றார்.

செங்கோட்டையனுக்கு நெருக்கமான மூத்த ர.ர.விடம் கேட்டபோது, "செங்கோட் டையனுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் இத்தகைய செய்திகளுக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் செங்கோட்டையனே மறுப்பு தெரிவித்துள்ளார். இப்போது தனது பேரனின் திருமணத்தில்தான் கவனமாக இருக்கிறார். அதற்காகக் கட்சியின் தொடக்க கால நண்பர் களிலிருந்து அனைவருக்கும் அழைப்பிதழ்களை நேரடியாக வழங்கிவருகிறார்'' என்றார்.

எம்.எல்.ஏ. கருப்பண்ணன் தரப்பைச் சேர்ந்த ர.ர.வோ, "செங்கோட்டையன் எப்போதும் புகழ் போதையில் உள்ளவர். அரசியல் களத்தில் தன்னைப் பற்றி பரபரப்பாக செய்திகள் வரவேண்டுமென விரும்புவதால் அவரது ஆட்களே இப்படி பரப்பி பத்திரிகையில் செய்தி வரவைத்துவிட்டார்கள். இதற்கும் கோஷ்டி அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்றார்.

பா.ஜ.க. குறித்து தமிழக அரசியல் களத்தில் எப்போதும் பேசுபொருளாகவே இருக்க வேண்டுமென்பதில் குறியாக இருக்கும் பா.ஜ.க. மாநிலத் தலைமையின் அந்த நிர்வாகிதான் அவதூறுச் செய்திகளுக்கு பின்னணியில் உள்ளவராம்!