Skip to main content

கொரோனாவை தவிர மற்ற நோயாளிகளைக் கவனிக்க மறுத்த டாக்டர்கள்! சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட அமைச்சர் 

Published on 03/04/2020 | Edited on 03/04/2020
ச்


கோவை சௌரிபாளையத்தில் 48 வயதான ஏஞ்சலீன் மேரி தனது மகனுடன் வசித்து வருகிறார் சர்க்கரை நோயால் தனியார் ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன், நோய் தீவிரமானதை அடுத்து இவரின் கால்களின் நான்கு  விரல்கள் எடுக்கப்பட்டன.

தொடர்ந்து உடல்நிலை மோசமானதை அடுத்து, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏஞ்சலீன் மேரிக்கு, ஊசி மற்றும் மருந்து கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அறுவை சிகிச்சை அளித்தால் மட்டுமே நோயிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நிலையில்,  கொரோனா சிகிச்சை தான் எங்களுக்கு முக்கியம்.அதனால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவமனை மறுத்திருக்கிறது.

 

ஊரடங்கு காரணமாக பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருப்பதாலும், பொருளாதார சூழல் காரணமாக பணம் இல்லை. அரசு மருத்துவமனையைத் தவிர வேறு வழியில்லை என ஏஞ்சலீன் மேரி  குடும்பத்தினர் சொல்லியும் கேட்கவேயில்லை மருத்துவமனை.இதை அறிந்த மீடியாக்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசயத்தைக் கொண்டு சென்றது.

 

உடனடியாக, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனை தொடர்பு கொண்ட மினிஸ்டர் வேலுமணி, எந்தவித தாமதமுமின்றி ஏஞ்சலீன் மேரிக்கு சிகிச்சை அளிக்கவும், கொரோனா காரணமாக மற்ற எந்த சிகிச்சையும் பாதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். 

 

இதையடுத்து, ஜி.ஹெச் நிர்வாகம், ஏஞ்சலீன் மேரியை உடனடியாக மருத்துவமனைக்குள் அழைத்து, அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தே.மு.தி.க. - அ.தி.மு.க. கூட்டணி உறுதி?” - எஸ்.பி. வேலுமணி சூசகம்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
DMDK - ADMK Alliance sure Sp Velumani 

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடந்த 7 ஆம் தேதி (07.02.2024) காலை 10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தே.மு.தி.க. தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

மாவட்டச் செயலாளர்களில் ஒரு தரப்பினர் பா.ஜ.க.வுடனும் மற்றொரு தரப்பினரோ அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும். எனவே யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுவரை கூட்டணி குறித்து யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான எல்.கே. சுதிஷ், பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள், மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

DMDK - ADMK Alliance sure Sp Velumani 

இந்த சந்திப்பிற்கு பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். கூட்டணி குறித்து விவாதிக்க அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். இதன் பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், ‘கூட்டணி உறுதி என எடுத்துக் கொள்ளலாமா?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு எஸ்.பி. வேலுமணி, “நேரடியாக வந்து சந்தித்து பேசியதை வைத்தே புரிந்து கொள்ளுங்கள்” என சூசகமாகப் பதிலளித்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரை விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி அ.தி.மு.க.வில் விருப்ப மனுக்களை பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

“நான் போயி ரோட்ல உட்காரவா?” - போலீசாரை மிரட்டிய எஸ்.பி. வேலுமணி! 

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

SP Velumani have conflict with police in kovai

 

தமிழகத்தின் இருபெரும் கட்சிகளுள் ஒன்று அதிமுக. பல்வேறு உட்கட்சிப் பிரச்சனைகளைத் தாண்டி ஓரணியில் திரண்ட எடப்பாடி தலைமையிலான அதிமுக, தாங்கள் தூக்கிச் சுமக்கும் வீண் சுமையாக பாஜக கூட்டணியை பார்த்தது. இதனால், பாஜக மற்றும் அதிமுக தலைவர்களிடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டது. விளைவு, அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளாமல் மென்மையான போக்கை கையாளுவதால், இது ஒரு பொய்யான நாடகம் என எதிர்க்கட்சிகள் பலவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

 

ஆனால், இத்தனை நாளாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால்தான் நமக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமியத் தலைவர்களையும், கிறிஸ்தவ தலைவர்களையும் தேடித் தேடிச் சென்று சந்தித்து வந்தார். இந்த நிலையில், கோவை முப்பெரும் விழா மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரம், மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணையும் மற்றொரு விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அவரது முன்னிலையில் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாக அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது.

 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில், முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. இந்த முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக, அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், கிறித்துவ கூட்டமைப்பு மற்றும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, அவிநாசி சாலையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், உரிய அனுமதி பெறாமலும் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பதாகைகளை போலீசார் அகற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுக தொண்டர்கள் மற்றும் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்தவர்கள், கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் திரண்டு, பேனர்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநாட்டு பந்தலை பார்வையிடுவதற்காக வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

 

அப்போது வேலுமணி, "காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை இங்கு என்னால் வரவைக்க முடியும். நான் போய் சாலை மறியலில் ஈடுபடவா? நான் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற கொறடா. உங்களுக்குப் பிரச்சனை என்றால் உயர் அதிகாரியை வரச் சொல்லுங்கள்.. வக்கீல எதுக்கு மிரட்டுறீங்க.." என காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், வேலுமணியுடன் இருந்த சூலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ. கனகராஜ் மற்றும் அதிமுகவினரும் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுக பேனர்கள் வைக்க மட்டும் அனுமதி கொடுக்கும் போலீஸ், எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை எனவும், கிருஸ்தவர்கள் நடத்தும் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இதுபோன்று நடந்து கொள்ளக் கூடாது எனவும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டார். பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுமாறும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்ற வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். 

 

இதுகுறித்து கிறிஸ்துவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மேசாத் ராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கிறித்துவ மாநாட்டுக்கு பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி நிகழ்வுகளின் போது பேனர் வைக்க அனுமதித்த போலீசார், சிறுபான்மை சமூகத்தினரின் நிகழ்வுக்கு பேனர் வைக்க திட்டமிட்டு அனுமதி மறுக்கின்றனர். திமுக அரசு சமூக நீதி பேசுவதாக கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எங்களது கோரிக்கைகளை தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநாட்டில் பங்கேற்க  அழைப்பு விடுத்திருந்தோம். அதைத் தற்போது அரசியலாக முயற்சித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார். நள்ளிரவு சமயத்தில் அதிமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிரிந்த பிறகு, கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.