சென்னை அண்ணா அறிவாலயத்தில், கையாலாகாத அதிமுக ஆட்சியில் படுகொலையாகும் மக்கள் பறிபோகும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் இன்று காலை நடந்தது. சபாநாயகராக சக்கரபாணி பொறுப்பேற்று மாதிரி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினார்.
இதில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை அதிமுக எம்எல்ஏவுமான கருணாஸ்,
எந்த வித உரிமைகளும் இல்லாத அந்த மன்றம் எதுக்கு? அது சட்டமன்றம் அல்ல வெட்டி மன்றம். அவர்களே அவர்களுக்காக குரல்கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். தற்பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நான் செய்தேன், நான் செய்தேன், நான் செய்தேன் என்று சொன்னால் உங்க வீட்டில் இருந்து எடுத்து வந்த பணத்திலா அதை செய்திர்கள்? ஜனநாயக நாட்டின் அடிப்படை உரிமை அது.
உங்களை எதற்காக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் மக்கள். மக்களுடைய திட்டங்களை செயல்படுத்துவதற்காக தான். செயல்படுத்த தவறியவர்களை கேள்வி கேட்டகூடாது என்று சொன்னால் அது எந்த விதத்தில் நியாயம். ஆக நான் இன்றைக்கு இந்த இடத்தில் வந்துவிட்டேன் என்பதற்காக அவர்களை குறைசொல்லவில்லை. நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிகொண்டு தான் இருக்கிறேன்.
இதுவரை 182 மனுக்கள் தொகுதி சார்பாக நான் கொடுத்து இருக்கிறேன். இரண்டே இரண்டு மனுக்கள் மட்டும் தான் பரிசீலனை செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்ககூடிய அதிமுகவின் நிர்வாக நிலை.முழுக்க முழுக்க வியாபாரிகள் ஒன்றாக சேர்ந்து ஒன்று நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஒரு மிகப்பெரிய வியாபாரம் நடந்து கொண்டு இருக்கிறது.
தொகுதிக்கு செல்ல முடியவில்லை. பாதுகாப்பு இல்லை. பலமுறை சொல்லி இருக்கிறேன். தவறான தகவல்களை சொல்கிறார்கள். கடந்த குருஜெயந்திக்கு முதலமைச்சர் வருகின்ற பொழுது நான் அங்கு அன்னதானம் போடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். எதிர்கட்சி தலைவரையும் வரவேற்றேன். ஆனால் அன்றைக்கு உளவுத்துறை சொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட தகவல். என்ன தெரியுமா? நான் முதல்வர் வருவதை தடுக்க போகிறேன். நான் முதல்வரை என் ஆட்கள் கொண்டு அடிக்க போகிறேன் என்கின்ற தகவலை தான் தமிழ்நாடு உளவுத்துறை கொடுத்தது. நடக்காதது ஒன்றை இல்லாத ஒன்றை சொல்லக்கூடிய அதிகாரி முதல்வர் இடத்தில் இருக்கிறார். உண்மையை சொல்வதற்கு யாரும் இல்லை. மக்களை காப்பற்றுவதற்கான அதிகாரி யாரும் இல்லை. அரசு செய்யகூடிய தவறுகளை எப்படி சமாளிப்பது என்று சொல்லகூடிய அதிகாரிகள் தான் அங்கு இருக்கிறார்கள்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பணியை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்தி கொடுக்காத அரசு தேவையா? இதுதான் என்னுடைய கேள்வி? செயலற்ற அரசாக மக்களுக்கு பணிகள் செய்யமால் இருக்ககூடிய அரசு தேவையா? இதுதான் தமிழர்களின் ஒட்டுமொத்த கேள்வியாக இருக்கிறது. ஆகவே மக்களுக்கான ஒரு ஆட்சி, மக்களை குறைகளை போக்ககூடிய ஒரு ஆட்சி, மக்களுக்கு பிடிக்காத திட்டங்களை வேண்டாம் என்று சொல்லக்கூடிய ஒரு ஆட்சி, மக்களின் உரிமைக்களுக்காக போராடக் கூடிய ஒரு ஆட்சி, மக்களுக்காக மக்களுடனேயே வாழ்ந்து காட்ட கூடிய ஒரு ஆட்சி இந்த தமிழகத்தில் வேண்டும். அது ஸ்டாலின் தலைமையில் உருவாக வேண்டும். என்பது தான் என்னுடைய ஆசை. என்னுடைய ஆவல். அன்றைக்கு எனக்கு சட்டமன்ற வாய்ப்பு கிடைத்து விடும் என்பதற்காக அல்ல. நான் மிகமிக ஆர்வபட்டுவந்தேன். நடப்பதை எல்லாம் பார்த்தேன். போதும்.
கூவத்தூரில் ஏற்பட்ட அவமானங்கள் போல வேற எந்த அவமானமும் எனக்கு ஏற்படப்போவதில்லை. யார் ஒருவரும் என்னை பார்த்து விரல் நீட்டி பேசியது கிடையாது. ஆனால் அத்தனை அவமானங்களை சந்தித்து இருக்கிறேன்.
இன்றைக்கு நடந்து கொண்டிருக்க கூடிய நிர்வாகம் சரியில்லை. தலைமை சரியில்லை. ஒரு வீட்டில் கணவன் சரியில்லை என்று சொன்னால் அதன் முழு பொறுப்பு அந்த குடும்ப தலைவனுடையது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. உள்ளாட்சி கட்டமைப்பு இல்லை. மாவட்ட ஆட்சியாளர்கள் மந்திரிகளுக்கு தலை சாய்க்க கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களை அமர்த்தி கொள்கிறார்கள்.
எதற்காக என்று கேட்டால் மணல் அள்ளுவதில்தான் அதிகமாக பணம் இருக்கிறது என்கிறார்கள். காவல் துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. அதற்கான ஆதாரம் என்னிடத்தில் இருக்கிறது. நானே பேசியிருக்கிறேன். ஆதாரத்தை கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. முதலமைச்சரிடத்தில் புகார் கொடுத்துட்டா, முக்குலத்தோடர் புலிப்படைக்கு அமைச்சர் பதவி கொடுத்துருவாங்களா? என்று கேட்கின்றனர். இவ்வாறு பேசினார்.