
பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்குக் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின் படி ரசீது ஆவணத்திற்குப் பதிவுக் கட்டணம் 20 ரூபாய் இருந்த நிலையில் தற்போது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பொது அதிகார ஆவணக் கட்டணம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் ஒரு சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச முத்திரைத் தீர்வைக் கட்டணம் 25,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தனிமனை பதிவிற்கானக் கட்டணம் 200 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்கிறது. செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகபட்ச பதிவு கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படிப் பல்வேறு கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அனைத்து பத்திரப் பதிவு சேவைக் கட்டண உயர்வும் நாளை மறுநாள் ஜூலை 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவுத் துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கானக் கட்டணம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருத்தம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேபோல் அண்மையில் பதிவாளர்கள் மற்றும் சார்பதிவாளர்கள் நிர்வாக காரணங்களுக்காக அதிக அளவில் இடமாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.