பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திராவிட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அதேநேரம் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி 3000 பேர் திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர். இணைகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒரு மண்டல செயலாளர், 6 மாவட்ட செயலாளர்கள் என பலர் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''பெரியாரை தாக்கிவர்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் நிறைய பேர் திமுகவில் இணைய தயக்கம் காட்டுகின்றனர். அவர்களையும் நீங்கள் இணைக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் நாம் வென்று காட்ட வேண்டும்'' என்றார்.
அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ''அண்ணா அறிவாலையத்தில் மண்டபம் நிறைந்து, பார்வையாளர்கள் இடமும் நிறைந்துள்ளது. உங்களை எல்லோரும் நான் பாராட்ட வேண்டும். வருக வருக என வரவேற்கிறோம். எந்த திசையில் இருந்து நீங்கள் வந்தீர்கள் என்பதை பற்றி கவலை இல்லை. ஆனால் எந்த திசையை நோக்கி நீங்கள் வரவேண்டுமோ அந்த திசையை நோக்கி நீங்கள் வந்திருக்கிறீர்கள். தன்மானம், தமிழ் உணர்வு, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம் இதையெல்லாம் இங்கு எந்த கட்சி தன்னுடைய லட்சியமாகக் கொண்டிருக்கிறதோ; நாட்டு நோக்கும் நாட்டு மக்களிடம் விளக்கிக் கொண்டிருக்கிறதோ அந்த இடத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். காரணம் இளைய சமுதாயத்தால் உருவாக்கப்பட்டது தான் திமுக அரசு. எனவே அடுத்து வாழையடி வாழையாக இந்த இயக்கத்திற்கு வர வேண்டிய நீங்கள் வந்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
வரும் வழியில் பலர் உங்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வார்கள். நீங்கள் அந்த வழியில் சென்றிருப்பீர்கள். ஆனால் போன பிறகுதான் தெரிகிறது அவர்கள் தலைவர்கள் அல்ல தரம் தாழ்ந்தவர்கள் என்று. நாம் இந்தியை எதிர்ப்போம்; சிலர் இந்தியை ஆதரிப்பார்கள். நாங்கள் மாநில சுயாட்சி கேட்போம் அதை சிலர் எதிர்ப்பார்கள். இவை எல்லாம் கூட அரசியல் என்று எடுத்துக் கொள்ளலாம். நான் இங்கே துரைமுருகன் எம்.ஏ, பி.எல், ஒரு சட்டமன்ற உறுப்பினர், கழகத்தின் பொருளாளர் இவ்வளவு அந்தஸ்துக்களையும் பல ஆண்டுகளாக நான் பெற்று இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் ஒரே ஒருவர் தந்தை பெரியார்.
பெரியார் இல்லாவிட்டால் இன்னும் நான் கோவணம் கட்டி ஏர் ஒட்டிக்கொண்டு தான் இருந்திருப்பேன். நம்மைப் பற்றி நமக்கு புரிய வைத்தவர் தந்தை பெரியார். அதற்காக அவர் பட்ட அவமானங்கள், எதிர்மறைகள் அதிகம். சேற்றை வாரி இறைத்தனர். இறைத்து கொண்டும் இருக்கிறார்கள் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. பெரியாரிடம் போய் கேட்டார்கள் 'ஏன் சிலர் இப்படி செய்கிறார்கள்' என்று, 'இன்னும் அவர்கள் பழைய ஆட்களாக இருக்கிறார்கள் இன்னும் திருந்தவில்லை. வருவார்கள்' என்று சொல்லிவிட்டார்'' என்றார்.