
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் சென்னை எழும்பூரில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் 'பிரிந்து கிடக்கின்ற அதிமுக ஒன்றிணைய வேண்டும்' என நபிகள் நாயகத்திடம் வேண்டுதல் வைப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வழக்கமாக செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பன்னீர்செல்வம் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இஃப்தார் விருந்திற்கு பிறகும் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ''அதிமுக இணைவதற்குரிய ஒளிவட்டம் தெரிகிறது. உறுதியாக நடக்கும்'' என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து இன்று காலை நெல்லையில் அதிமுக நிர்வாகியின் துக்க நிகழ்வில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஓபிஎஸ் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''கோவிலாக கருதும் அதிமுக அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கியவர் ஒ.பன்னீர்செல்வம். எனவே அவரை பிரிந்தது பிரிந்துதான். அதிமுகவில் இருக்கத் தகுதியற்றவர் ஓபிஎஸ்'' என பதிலளித்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''எடப்பாடி பழனிசாமி, அதிமுக வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் எந்த காலத்திலும் இருக்கக் கூடாது என்று தன்னுடைய நடவடிக்கை செய்து கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தான் அதிமுக தலைமை அலுவலகத்தை தாக்கினர். ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் நான் வெற்றி பெறுவேன் என்று தான் தலைமைக் கழகத்தில் வைத்துப் பேசினார்கள். ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. அவராகவே பொதுச்செயலாளர் என்ற பதவியிலிருந்து விலகிக் கொள்வது தான் மரியாதையாக இருக்கும். இல்லை என்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார்'' என்றார்.