சேலம் அருகே, ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் தன்னை காவல்துறை காவலர் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தை அடுத்த வீரபாண்டி தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). கூலித்தொழிலாளி. இவர் மணியனூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, இரவில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். நெய்க்காரப்பட்டி பட்டர்பிளை பாலம் இறக்கம் பகுதியில் வந்தபோது, தனது நண்பரை பார்த்து வழியில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், தான் கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவலர் எனக்கூறி, பொது இடத்தில் மது அருந்துகிறீர்களா எனக்கேட்டு அவர்களை மிரட்டியுள்ளார்.
மேலும், மணிகண்டனிடம் இருந்த அலைபேசி, 4500 ரூபாய் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, காலையில் காவல்நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்குச் சென்ற மணிகண்டன், அந்த காவலரை தேடியபோது அப்படியொரு நபரே அங்கு பணியாற்றவில்லை என்பது தெரிய வந்து, அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அவரிடம் அலைபேசி மற்றும் பணம் பறித்துச்சென்ற நபர், நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (31) என்பதும், ஊர்க்காவல் படை வீரர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மணிகண்டனிடம் இருந்து பறித்துச்சென்ற அலைபேசி, பணம் ஆகியவற்றை மீட்டு ஒப்படைத்தனர்.