
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடுதல் உள்ளிட்ட வீர விளையாட்டுகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பல்வேறு சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்திவந்த நிலையில், வருகின்ற 2021ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விளையாட்டுகளில் புதிய சட்ட விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதில் மாடுபிடி வீரர்கள் கண்டிப்பாக கரோனா பரிசோதனை பெற்ற சான்றிதழுடன் பங்கேற்க வேண்டும். வீர விளையாட்டுகள் நடைபெறும் இடங்களில் 50 சதவீதத்துக்கு மிகாமல் பொதுமக்கள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி இடைவெளிகளைக் கடைப்பிடித்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும். மேலும், 300க்கும் மிகாமல் வீரர்கள் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி போட்டியில் பங்கேற்க வேண்டும். உள்ளிட்ட விதிமுறைகளை அரசு இன்று வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ளக் கூடிய ஒவ்வொருவரும் கண்டிப்பாக முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.