பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான (பி.எல்.ஏ2) ஆலோசனைக்கூட்டம் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் ஒன்றியம் சார்பாக செம்பட்டியில் உள்ள சி.எம்.மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாறைப்பட்டி ராமன் தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் வரவேற்றுப் பேசினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, மாவட்டப் பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் மார்கிரேட் மேரி, பிலால் உசேன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி. செந்தில் குமார் பேசும்போது, “தலைவர் ஸ்டாலின் சொல்லும் அனைத்து உத்தரவுகளையும் நிறைவேற்றக்கூடிய மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் முதன்மையானது. இந்த மாவட்டத்தில்தான் குறிப்பாக ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கையில் சாதனை படைத்துள்ளோம். வரும் பாராளுமன்றத் தேர்தல் நமது தலைவர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பு வருகிறது. நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் ஆத்தூர் தொகுதியில் வாங்கித்தந்து ஆத்தூர் என்றும் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம்” என்று கூறினார்.
இதையடுத்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “இந்த வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் அமர்ந்திருப்பவர்களில் 50 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்கள் என்னுடன் 35 வருட காலம் கழகப் பணியாற்றியவர்கள். அவர்களால்தான் இன்று நான் அமைச்சராக பதவியில் உள்ளேன். அதை என்றும் நான் மறக்க மாட்டேன். காரணம் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்டவன் நான். ஒவ்வொரு முறை கழகத்திற்கு சோதனை வரும் போதெல்லாம் தொண்டர்களைப் பார்த்து உற்சாகம் அடைபவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அதுபோல இன்று நம் திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க. ஸ்டாலின் அயராது உழைப்பால் சோர்வடையும்போது அவருக்கு உற்சாகம் தருபவர்கள் திமுக தொண்டர்களே. முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு திமுக தொண்டனும் பாராளுமன்றத் தேர்தல் பணியில் பம்பரம் போல் சுழன்று சுறுசுறுப்பாக செயல் படவேண்டும்.
தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறவேண்டும். அந்த வெற்றியை நாம் நமது முதல்வர் முக.ஸ்டாலின் கரத்தில் வழங்க வேண்டும். அதற்கு வாக்குச்சாவடி முகவர்களின் பங்கு முக்கியமானது. ஒரு ஓட்டைக் கூட வீணாக்காமல் பதிவு செய்வதில் கவனம் செலுத்துவதோடு நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து பணியாற்றி, திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் அமோக வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும். வரும் காலங்களில் ஆத்தூர் தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, கிராமப்புற பெண்களுக்கு அவர்களின் படிப்பை பொறுத்து அரசுப் பணிகளில் முதலிடம் கொடுத்து அரசுப் பணி வழங்குவதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறேன். இதன் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அரசுப் பணி கிடைப்பது உறுதி” என்று கூறினார்.