
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆழ்குழாய் பாசனத்தில் நடவு செய்யப்பட்ட நெல் பயிர்கள் மற்றும் சிறு தானிய பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்பனைக்காடு, கறம்பக்குடி ஒன்றியத்தில் சில கிராமங்கள், அறந்தாங்கி ஒன்றியப் பகுதியில் உள்ள ஒரு சில கிராமங்களில் கல்லணை கடைமடைப் பாசனத்தில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம் மற்றும் சுற்றியுள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை, பலா, வாழை விவசாயம் செய்யப்பட்டாலும் ஆழ்குழாய் நீர்பாசனத்தில் பலர் நெல் விவசாயம் மற்றும் கடலை, சோளம், பயறு போன்ற விவசாயம் செய்து வந்தனர். இவற்றிக்கு ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 16 ந் தேதி தாக்கிய கஜா புயலில் மரங்களுடன் மின்கம்பங்களும் உடைந்து நாசமானதால் அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு பிறகு முதல்கட்டமாக வெளியூர் மின்வாரிய பணியாளர்கள் குடிதண்ணீர் நீர்தேக்க தொட்டிகளுக்கு மின் இணைப்புகள் கொடுத்தனர். அதன் பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 70 சதவீதம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வெளியூர் மின்வாரிய ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். அதனால் மின்சாரம் கொடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மூழ்கி மோட்டார்கள் இயக்கும் அளவிற்கும் மின் இணைப்புகள் இன்னும் கொடுக்கப்படவில்லை. அதனால் நெல், சோளம், பயறு, கடலை போன்ற சிறு பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிவருகிறது.
இது குறித்து கீரமங்கலம், வடகாடு பகுதி விவசாயிகள் கூறும் போது.. கஜா புயல் தாக்கிய பிறகு வெளியூர் மின்வாரிய ஊழியர்கள் வந்து சிறப்பாக பணி செய்தனர். அவர்களின் பணியால் அனைத்து கிராமங்களுக்கும் குடிதண்ணீர் தொட்டிகளுக்கு மின் இணைப்பு கிடைத்தது. 60 முதல் 70 சதவீதம் வீடுகளுக்கும் மின் இணைப்புகள் கிடைத்தது. ஆனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் அதன் பிறகு மின் ஊழியர்கள், மின்கம்பங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தற்போது குறைவான மின் ஊழியர்கள் மட்டும் இருப்பதால் அந்தந்த பகுதி இளைஞர்கள் மின்கம்பங்களை ஊன்றி, மின்கம்பிகளை இணைத்து வருகின்றனர்;. மேலும் வீடுகளுக்கு மின்சாரம் செல்லும் வகையில் 2 கம்பிகள் மட்டுமே பொருத்தப்படுகிறது. அதனால் நீர்மூழ்கி மோட்டார்களை இயக்க முடீயாத நிலை உள்ளது. மேலும் தற்போது 2 கம்பிகள் மட்டும் பொருத்துவதால் மீண்டும் மற்ற 2 கம்பிகளை இணைக்க மறுபடியும் மின்வாரிய ஊழியர்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அனைத்து பகுதிகளுக்கும் 4 மின்கம்பிகளை பொருத்தவதுடன் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் முழுமையாக மின் இணைப்புகள் விரைந்து வழங்க மீண்டும் வெளியூர் மின்வாரிய ஊழியர்களையும், கூடுதல் மின்கம்பங்களை வழங்கினால் புயல் பாதிப்பில் எஞ்சியுள்ள பயிர்களை காப்பாற்ற முடியும். இல்லை என்றால் சிறு பயிர்கள் விரைவில் கருகி விவசாயிகளுக்கு மேலும் இழப்பை ஏற்படுத்தும் என்றனர்.