Skip to main content

ராமேஸ்வரம் குந்து காலில் 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் - மீனவர்களிடம் ஆலோசனை

Published on 16/04/2018 | Edited on 16/04/2018

 

rameswaram

 

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திலுள்ளகுந்துகாலில் ரூபாய் 70 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்குதளத்தை ஒன்றரை வருடங்களில் கட்டிமுடிக்கப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தமிழக மீன்வளத்துறையின் முதன்மைசெயலாளர் கோபால் தெரிவித்தார்.

 

இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் இருந்து பாக்ஜலசந்தி  கடற்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது  இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது, இது போன்ற சம்பவங்கள்  இன்றல்ல நேற்றல்ல கடந்த 30 வருடங்களாகவே இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் சந்தித்து வரும் மிக பெரிய பிரச்சனை.

 

மேலும் மீனவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக மீனவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரமே போராட்டக்களமாக மாறிவருவது வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது.

 

இந்நிலையில் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது தான் 'ஆழ்கடல் மீன்பிடிப்பு" என்ற திட்டம்.

 

'ஆழ்கடல் மீன் பிடிப்பு" திட்டமானது மன்னார் வளைகுடா கடற் பகுதிக்குள் சென்று ஆழமான பகுதிக்குச் சென்று மீன்களை பிடிப்பதற்கான திட்டம். இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்  இராமேஸ்வரத்தை அடுத்துள்ள குந்துகால் பகுதியில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க மத்திய, மாநில அரசு சுமார் 70 கோடி நிதி ஒதுக்கியது. 

 

இந்நிலையில் இன்று வெளியுறவுத்துறை இணை செயலாளர்  சஞ்சய் பாண்டா, பிரதமர் அலுவலக இணை செயலாளர் ப்ரிந்த்ரா நவனிக் மற்றும்   கால்நடை பராமரிப்பு மற்றும்   மீன்வளத்துறை இணை செயலாளர்  ராஜேஸ், தமிழக மீன்வளத்துறையின் முதன்மை செயலாளர் கோபால்  ஆகியோர்கள்  குந்துகாலில் இறங்குதளம்  அமைப்பது தொடர்பாக மீனவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தனர்.

 

பின்னர் மீன் இறங்குதளம் அமைய யுள்ள இடத்தை ஆய்வு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறையின் முதன்மைசெயலாளர் கோபால் : குந்துகாலில் சுமார் 70கோடி மதிப்பில் கட்டப்படும் மீன்பிடி இறங்குதளம் ஒன்றரை ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் இதற்கான ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க கூடிய படகுகள் கொச்சியில் தயார் செய்யப்பட்டு வருகின்றது. முதல் கட்டமாக கட்டப்பட்டு வரும் படகுகள் இங்கு கொண்டு வரப்பட்டு உரிய பயனாளிகளிடம் வழங்கப்படும். பின் இரண்டாம் கட்டமாக  கட்டப்படும் படகுகள் தேர்வு செய்யப்பட்ட மீனவர்களிடம் வழங்கப்படும், தற்போது பெயர் பதிவு செய்த மீனவர்களுக்கு மட்டும்  படகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது, மேலும் மூக்கையூரில் கட்டப்பட்டு வரும் மீன்பிடிதுறைமுகம் பணிகள் அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில்  முடிவடையும்   என அவர் தெரிவித்தார்.’’


 

சார்ந்த செய்திகள்