
கள்ளக்குறிச்சியில் கல்யாணத்திற்கு பணம் தராத தந்தையை மகன் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கநாதபுரம் பகுதி சேர்ந்தவர் வேலு. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பொன்னம்மாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முதல் அவரது மகன், மகளுடன் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் பொன்னம்மாள் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டி வேலுவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் வேலு பணம் தர மறுத்துள்ளார். இதனை தன்னுடைய மகன் தசரதனிடம் பொன்னம்மாள் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தசரதன் நேற்று இரவு வேலு மற்றும் அவரது இரண்டாவது மனைவி கண்ணியம்மாள் வசித்துவந்த வீட்டிற்கு சென்று கல்யாணத்திற்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் வேலு படுகாயமடைந்த நிலையில் கன்னியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அங்கிருந்து தசரதன் தப்பி ஓடிய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்யாணத்திற்கு பணம் தராததால் தந்தையை மகனே கொலைசெய்ய முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.