Skip to main content

விவசாயிகளிடம் மண் உருண்டையை உரம் என ஏமாற்றி விற்பனை!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Farmers near Bhuvanagiri are selling solid ball as fertilizer

புவனகிரி அருகே சேத்தியாதோப்பு, சக்திவிளாகம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சிறிய ரக சரக்கு வண்டியில் பிரபல தனியார் உர கம்பெனியின் பெயரில் ஏராளமான உர மூட்டைகளை எடுத்து வந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் சக்தி வாய்ந்த இயற்கை உரம் எனக்கூறி விற்பனை செய்துள்ளனர். இதனை நம்பி அப்பகுதியில் தற்போது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள 5க்கும் மேற்பட்ட விவசாயிகள் உரத்தை வாங்கியுள்ளனர்.

அப்போது சில விவசாயிகள் இது மண் உருண்டைகள் போல் உள்ளதே எனக் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இது இயற்கை உரம் இதனை நெற்பயிருக்கு போடும்போது அதிகபட்சமாக விளைச்சல் இருக்கும் என ஆசை வார்த்தை கூறி ஒரு மூட்டை உரம் ரூ.1150 விற்பனை செய்துள்ளனர். இதில் திருப்தி அடையாத விவசாயிகள் விற்பனை செய்து விட்டு சென்ற ஒரு மணி நேரம் கழித்து விவசாயிகள் அந்த உரத்தை எடுத்து கையால் நுணுக்கி உள்ளனர். அப்போது வெறும் மண்ணாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து விட்டோம் எனக் கருதி அதிர்ச்சியில் வேதனை அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து கீரப்பாளையம் வட்டார வேளாண் துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து சம்பந்தபட்ட இடத்திற்கு வந்த வேளாண் துறை அலுவலர்கள் அந்த உரத்தை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து வேளாண் துறை உதவி இயக்குநர் அமிர்தராஜ் கூறுகையில் கீரப்பாளையம் வட்டாரத்தில் 2500 ஹெக்டர் பரப்பளவிற்கு குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது என்றும் இதற்கு தேவையான உரங்கள் அங்கீகரிக்கப்பட்ட தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இங்கு முறையாக சென்று விவசாயிகள் உரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். உரம் விற்பனை செய்து விட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கிராமங்களுக்கு நேரடியாக வந்து சிலர் உரங்களை விற்பனை செய்தால் வாங்கி ஏமாற வேண்டாம். அப்படி உரம் விற்பனை செய்தால் அவர்கள் குறித்து உடனடியாக வேளாண்துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். அதேபோல் சேத்தியாதோப்பு, கம்மாபுரம் புவனகிரி சுற்று வட்டார பகுதிகளில் இவர்கள் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நன்கு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“விவசாயிகளின் கவனத்திற்கு...” - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
For the attention of farmers TN govt important announcement

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 2024 ஆண்டிற்கான டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட பல முன்னோக்கு திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில், உணவு உற்பத்தியை பெருக்கவும், உழவர் பெருமக்களின் வருமானத்தை அதிகமாக ஈட்டவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தொலைநோக்குத் திட்டங்களைத் தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

பருவ மழைகளால் நிரம்பப் பெறும் மேட்டூர் அணை நீர், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகிய காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் நாள் திறந்து விடப்படுவது மரபு. எதிர்பாராத சூழ்நிலைகளால் பருவமழை காலந்தாழ்த்தி இருப்பதால் இந்த ஆண்டு 2024 மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், டெல்டா சாகுபடிக்கு நீரை திறந்து விட கால தாமதம் ஏற்பட்டு உள்ளது. இது மிகுந்த மனவேதனையை தந்தாலும் வேளாண்மை மக்களின் நலனை முன்நிறுத்தி, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் குறுவை சாகுபடியாளர்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டும் டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக ரூ.78.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பை உழவர் நலன் கருதி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

For the attention of farmers TN govt important announcement

அதன்படி ஒரு இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு, 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூபாய் 3.85 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும். நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் வீதம், 1 இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி நிதி வழங்கப்படும். நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள 7 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில், நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்க ரூ.15 இலட்சம் வழங்கப்படும். அதோடு, துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களில். துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு. ஏக்கருக்கு 250 ருபாய் வீதம், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 25 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு மானியமாக 250 ரூபாய் வீதம் 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

பயறு வகைப் பயிர்களை 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 50 சதவீத மானியத்தில் தரமான விதைகள், சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் இலை வழி உரம் தெளிக்கவும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதியும், பயறுவகைப் பயிர்களில் மகசூல் திறனை அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் 10,000 ஏக்கருக்கு நுண்ணூட்டச்சத்து வழங்கிட ரூபாய் 20 இலட்சம் நிதியும் வழங்கப்படும். வேளாண்மை பொறியியல் துறை மூலம் விசை உழுவை, களையெடுக்கும் கருவி, விதை மற்றும் உரமிடும் கருவி, இயந்திரக் கலப்பை, சுழற் கலப்பை, சாகுபடிக் கலப்பை, பலதானியப் பிரித்தெடுக்கும் கருவி, ஆளில்லா வானூர்திக் கருவி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் போன்ற 442 கருவிகள் வழங்கிட மானியமாக ரூ.7 கோடியே 52 இலட்சம் நிதி வழங்கப்படும். 

For the attention of farmers TN govt important announcement

டெல்டா மாவட்டங்களில் வேளாண்பணியில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை வழங்க 24 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக அரசு நிதியிலிருந்து நிதி பெற்றும், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தும், ரூ.78.67 கோடி மதிப்பீட்டில். குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தினை செயல்படுத்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி...” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Good news that brings joy to the farmers CM MK Stalin

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண், வண்டல் மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர்களால் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்த நல்ல மழைப்பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில், வேளாண் பெருமக்கள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண் எடுத்து பயன்பெற்றிட இயலாத சூழ்நிலை இருந்தது. தற்போது இந்த நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைவாக இருக்கக்கூடிய சூழ்நிலையில், இவற்றை தூர்வாரி, கொள்ளளவை உயர்த்தினால், வரும் மழைக்காலத்தில் அதிக அளவு மழை நீரை சேமிக்க இயலும். இவ்வாறு மண்எடுத்து விவசாயப் பயன்பாட்டிற்காக பயன்படுத்திட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் பல வரப்பெற்றுள்ளன.

தற்போதுள்ள விதிகளில், விவசாய பயன்பாட்டிற்கும், பானைத் தொழில் செய்வதற்கும் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமப் பகுதியிலோ உள்ள நீர்நிலைகளிலிருந்து மட்டுமே மண் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், பல தகுதியான பயனாளிகளுக்கு தேவையான மண் கிடைக்காத நிலை உள்ளது. மேலும், இது போன்ற பயன்பாடுகளுக்கு அனுமதி பெற சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று மண் எடுக்க இயலும். இதனால், பயனாளிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் போது, மேற்கூறிய பிரச்சனைகளையும் களைந்து புதிய எளிதான நடைமுறையை வகுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

Good news that brings joy to the farmers CM MK Stalin

இதன் அடிப்படையில், சிறுகனிம விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், மற்றும் கால்வாய்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும். இது மட்டுமன்றி, விவசாயிகள் தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர்நிலையிலும் தேவைப்படும் மண்ணை எடுத்துக் கொள்ளவும் இந்த புதிய நடைமுறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறைகளை பயன்படுத்தி வேளாண் பெருமக்கள் அனைவரும் இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதிகளை எளிதில் பெற்று, தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர் நிலையில் இருந்தும் தேவைப்படும் மண்ணை எடுத்து, தமது வயல்களை வளம் பெறச் செய்யலாம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிn இந்த முன்னோடி அறிவிப்பால், வேளாண் பெருமக்கள் அனைவரும் எளிதில் பயன்பெறுவதோடு, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை உயர்த்தி அதிக மழைநீரைச் சேமித்திடவும் வழிபிறக்கும் என தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி... நீர்நிலைகளைத் தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை, வேளாண் பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் நீங்கள் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்தவொரு நீர்நிலையிலிருந்தும் எடுத்துக்கொள்ளலாம்!. இதற்கான அனுமதியை வட்டாட்சியர்களிடமிருந்து இணைய வழியாகக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். மழைநீரைச் சேமிக்கவும் மக்கள் பயன்பெறவும் இத்திட்டம் துணைபுரியும்!.” எனக் குறிப்பிட்டுள்ளார்.