Skip to main content

அண்ணனை மிஞ்சிய தம்பி; கோட்டையைப் பிடித்த சினிமாகாரன் - மாண்புமிகுவான பவன்

Published on 14/06/2024 | Edited on 20/06/2024
Pawan Kalyan became Deputy Chief Minister of Andhra Pradesh

ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜ 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆந்திராவில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம்.. சந்திரபாபு நாயுடுவை காட்டிலும் அதிகமாக பேசப்படுபவராக மாறியிருக்கிறார் பவன் கல்யாண். 

ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண்.. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருகிறார். தனக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள பவன் கல்யாண்.. நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி சேர்ந்து.. தான் போட்டியிட்ட 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2 எம்பி தொகுதிகளிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றார். வழக்கமாகத் தனது அரசியல் நிகழ்வுகள் என்றாலும் சரி.. ரசிகர்களைச் சந்திப்பது என்றாலும் சரி பிரம்மாண்டமாகக் கூட்டத்தைக் கூட்டி மாஸ் காட்டுவது பவன் கல்யாணின் வழக்கம். அதே போல், இந்த தேர்தலில்.. பவன் கல்யாண் நடத்திய ரோடு ஷோ பிரச்சாரங்கள்.. மற்றும் பாய் பாய்  ஜெகன் போன்ற முழக்கங்கள் தெலுங்கு தேச கட்சியின் வெற்றிக்கு உதவியதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

இத்தகைய அரசியல் சூழலுக்கு மத்தியில் பவன் கல்யாணின் சொந்த அண்ணனான ஆந்திர மெகா ஸ்டார்  சிரஞ்சீவி கடந்த 2008ம் ஆண்டில் பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். 2009இல் ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. அதில், 17 சட்டசபை தொகுதிகளில் வென்ற சிரஞ்சீவி கட்சி, லோக்சபாவில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன்பிறகு கடந்த 2011இல் சிரஞ்சீவி தனது கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக்கொண்டார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராஜ்யசபா எம்பியாக்கப்பட்ட சிரஞ்சீவி, கடந்த 2012இல் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே, 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியைப் பறிகொடுத்ததும் 2018 வரை ராஜ்யசபா எம்பியாக தொடர்ந்த சிரஞ்சீவி அதன்பிறகு தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. தற்போது அவர் காங்கிரஸ் கட்சிக்காக எந்த வித பிரச்சாரமும் செய்யவில்லை. ஆந்திர அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிரஞ்சீவி 10 ஆண்டுகளுக்குள் பியூஸ்போனதாக விமர்சிக்கப்பட்டது.

Pawan Kalyan became Deputy Chief Minister of Andhra Pradesh

அரசியலில் தன்னுடைய அண்ணன் சிரஞ்சீவி கானல்நீர் போல் காணாமல்போன சமயத்தில் 2014இல் ஜன சேனா என்ற கட்சி தொடங்கிய பவன் கல்யாண், பல்வேறு சறுக்கல்களை எதிர்கொண்டார். 10 ஆண்டுகளாக பவன் கல்யாணுக்கு கிடைக்காத அங்கீகாரம் தற்போது 2024 தேர்தலில் கிடைத்திருக்கிறது. 1996-ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பவன் கல்யாண். முப்பது படங்களைக் கூட முழுதாக எட்டிப்பிடித்திடாத பவன் கல்யாண், சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டுவார். இதனால், பவன் கல்யான் பவர் ஸ்டாராக திரையில் அவதாரமெடுத்தார். இவர் கட்சி தொடங்கிய போது சிரஞ்சீவியைப் போலவே தோற்கப் போகிறார் எனப் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இருப்பினும், பலகட்ட தோல்விகளுக்குப் பின்னர் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஜனசேனா கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இப்போதும், பலரும் இவரது வீழ்ச்சி காலம் தொடங்கிவிட்டது என விமர்சிக்கத் தொடங்கினர். 

இந்த நிலையில், தற்போது 2024 தேர்தலில் அவர் பெற்றுள்ள வெற்றி பலரையும் வாயடைக்கச் செய்துள்ளது. வெற்றிபெற்ற பின்னர், தனது சகோதரரான நடிகர் சிரஞ்சீவி வீட்டிற்கு பவன் கல்யாண் சென்றார். அப்போது, சிரஞ்சீவி குடும்பத்தினர் ரோஜா மலர்களால் பவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பவன் கல்யாணை ஆரத்தழுவிய சிரஞ்சீவி, பிரம்மாண்ட மாலையை அவருக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கேக் வெட்டி தேர்தல் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்மூலம், தன்னை விமர்சித்தவர்களுக்கு பவன் கல்யாண் பதில் சொல்லிவிட்டார் என அவரது ரசிகர்களும் தொண்டர்களும் கூறினர்.

Pawan Kalyan became Deputy Chief Minister of Andhra Pradesh

இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார். தொடர்ந்து, சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவையில் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனசேனாவுக்கு மூன்று அமைச்சர் பதவிகளும், பாரதிய ஜனதாவுக்கு ஒரு பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அண்ணன் சறுக்கிய இடங்களில் தானும் விழுந்திவிடாமல், தனக்கான ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி, மக்கள் மத்தியில் தன்னை அரசியல் ஆளுமையாக கட்டமைத்து, இன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் பவன் கல்யான். இப்போது, வெற்றிக் கொண்டாட்டத்தில் ஒற்றுமையாக சந்திரபாபுவும் பவன் கல்யாணும் இணைந்தே காணப்படுகின்றனர். இருப்பினும், இவர் இன்னும் சில மாதங்ககளில் சந்திரபாபு நாயுடுவுடன் அதிகாரத்திற்காக மோதக் கூடும். அப்போதுதான் ஆட்டமே இருக்கிறது என்கின்றனர் ஆந்திர அரசியலை உற்று நோக்குபவர்கள்.