Skip to main content

கஜா புயலில் கிடைத்த அனுபவம்: முன்னெச்சரிக்கை காட்டும் நாகை மீனவர்கள்

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத டெல்டா மாவட்ட மீனவர்கள் தற்போது உருவாகியிருக்கும் புதிய புயலால் அச்சமடைந்து, முன் எச்சரிக்கையாக தங்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

 

 Experience in the kaja storm: fishermen facing precaution

 

கடந்த நவம்பர் மாதம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜபுயலின்  கோரதாண்டவத்தின் வடுக்கள் இன்றுவரை மாறாத ரணமாக அப்பகுதி மக்களிடம் உள்ளது. மீனவர்கள் மீன்பிடி படகுகளையும், வலைகளையும், கட்டுமரங்களையும், கடலுக்கும், காற்றுக்கும் இரையாக கொடுத்தனர். அதே போல் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான மரங்களையும், வீடுகளையும் காற்றுக்கும், மழைக்கும் பலிகொடுத்துவிட்டு பரிதவித்து வீதியில் பொங்கி உண்ணும் நிலமை ஏற்பட்டது.

 

அந்த பாதிப்பில் இருந்து பாதி அளவிற்குக்கூட மீளாத நிலையில் யாரும் கேள்விப்பட்டிடாத வகையில்  வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் மற்றும் ஆந்திர இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அதிரடியாக அறிவிதித்திருப்பது பலரையும் கலங்கடித்துள்ளது.

 

கஜா புயலில் பல்லாயிரக்கணக்கான மரங்களையும், வீடுகளையும், நூற்றுக்கணக்கான படகுகளும் இழந்த மக்களுக்கு புதிய புயல் எச்சரிக்கையின் அறிவிப்பு நாகை மாவட்ட கடலோர பகுதி மக்களிடம் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 Experience in the kaja storm: fishermen facing precaution

 

கடலை மட்டுமே நம்பி கரையில் வாழும் மீனவர்களுக்கு உடமைகளே படகுகள் தான் என்பதால்,பெரும்புயலில் முழுமையாக பாதுகாப்பது முடியாது எனினும் தங்களால் இயன்ற அளவு தங்கள் படகுகளையும் மீன்பிடி வலைகளையும் பாதுகாக்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். 

 

விசைப்படகுகள் மீன்பிடிப்புக்கு தற்போது மீன் இனப்பெருக்கத்திற்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோர மீன்பிடிப்பில் ஈடுபட்டுவருபவர்களையும் புயலால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வியாழக்கிழமையே அறிவித்தது. இதனால் நாகை,திருவாரூர், மாவட்டத்தில் மீன்பிடித்தொழில் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களின் பிடி மீன்பிடி படகுகளை தரைகளில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

 

 Experience in the kaja storm: fishermen facing precaution

 

இதுகுறித்து புஷ்பவனம் மீனவர் அய்யாக்கண்ணு கூறுகையில்," ஏற்கனவே கஜாபுயலில், இருந்த  உடமைகள் முழுவதையும் பறிகொடுத்து விட்டோம். கட்டிய துணிகளோடு தப்பித்தோம், அரசு கடமைக்கு ஏதோ கொடுத்தது. தற்போது கந்து வட்டிக்கும், நகை நட்டுகளை அடகுவைத்தும் புதிய படகுகளை வாங்கி இருக்கிறோம். இதையும் இந்த புயலுக்கு பலி கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அதனால் முடிந்தவரை கரைக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க முயற்சித்து வருகிறோம். படகுகளை கரைக்கு கொண்டுவர வாடகை இயந்திரத்திற்கே வட்டிக்கு வாங்கி தான் கொடுத்து வருகிறோம். கஜா பாதிப்பிலிருந்து 5 மாதத்திற்கு பிறகு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் கடலுக்கு சென்றோம், அதற்குள் புதிய புயல் வருகிறது, வருமை தற்போது எங்களை வாட்டி எடுக்கிறது." என்கிறார் கண்ணீர் மல்க.

 

 

 

சார்ந்த செய்திகள்