Skip to main content

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை; அரசியல் கட்சியினர் கருத்து

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Entitlement amount for heads of household; political parties comment

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (20.03.2023) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து துறைவாரியான அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல்  வாக்குறுதி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

 

nnn

 

அதன்படி செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் எம்.எல்.ஏவுமான வேல்முருகன் பேசுகையில், “வருமான வரி கட்டக் கூடியவர்கள், ஆண்டு ஒன்றுக்கு லட்சக் கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் குடும்ப அட்டைதாரர்களாக, குடும்பத்தின் தலைவிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையிலேயே ஏழை எளிய குடும்ப தலைவிகளுக்கு இந்த ஊதியம் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் உரிமைத் தொகையை கிடைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.

 

அதனைத் தொடர்ந்து பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பத்திரப் பதிவு துறையில் பதிவுக் கட்டணம் நான்கு விழுக்காட்டிலிருந்து இரண்டு விழுக்காடாக குறைக்கப்பட்டு இருப்பது; காலை உணவுத் திட்டம் 30,122 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பாமக சார்பில் வரவேற்கிறோம்” என்றார். அதேபோல் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் என்ற சிறப்பான திட்டம் அறிவிக்கப்பட்டு அந்த காலை உணவு திட்டம் இந்த பட்ஜெட்டில் 30,122 பள்ளிகளுக்கு ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு விரிவு படுத்தப்படும். இதனால் 12 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்பது  வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

நீதிமன்றம் போட்ட போடு - பதவி விலகும் ஆளுநர்?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
the governor to resign?

நேற்று உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திடீர் முடிவு ஒன்றை ஆளுநர் எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்தது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாக சென்று கொண்டிருந்தது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, ஆளுநர் உரை, திருக்குறள், சனாதனம் எனப் பல்வேறு சர்ச்சைகளில் ஆளுநர் சிக்கி வந்த நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.