
காஞ்சிபுரத்தில் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் மது குடிப்போர் சிலர் பொது இடங்களிலேயே மது அருந்தியது பல்வேறு தரப்பினரின் கண்டனத்தைப் பெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைக்கட்டிய நிலையில் காஞ்சிபுரத்தில் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்க குவிந்த குடிமகன்கள் சாலை ஓரத்திலேயே அமர்ந்து மது குடித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பொருட்கள் வாங்கச் சென்று வந்த மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
தீபாவளியன்று கடைகளைத் திறந்து வைத்து விற்பனை செய்யலாம் என நினைத்த அக்கம்பக்கத்தில் இருந்த கடைக்காரர்களும் இதனால் அவதியுற்றனர். மூடப்பட்ட கடைகளின் வாயில்களில் குழுவாக அமர்ந்து சில குடிமகன்கள் மது அருந்தியது பலரின் கண்டனத்தைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் மார்க்கெட்டிற்கு சென்று வரும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனப் பல தரப்புகளில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது.