ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதற்கான தீர்ப்பு குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் போராட்டத்தை தூண்ட வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருந்தது. இது குறித்து தங்கள் தரப்பு பதில்களை அளிக்குமாறு தமிழக அரசுக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ம.தி.மு.க. தலைவர் வைகோவும் இதுகுறித்து தனது எதிர்ப்பை ஆணையத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே தருண் அகர்வால் கொடுத்த அறிக்கையின்படி ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அழைத்து பேசாமல் தமிழ்நாடு அரசு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையை மட்டும் ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது செல்லாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
இது தமிழக அரசுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என போராட்டங்கள் மீண்டும் வேகமாக நடக்கும். இதை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் தமிழக அரசின் காவல்துறை அதிகாரிகள் கலங்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி இதுகுறித்து மேல்முறையீடு செய்யபப்படும் என கூறியிருந்தார். அதனை அடுத்து தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான ஆணை இணையத்தில் கூட வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபப்படும் என கூறியுள்ளார். எனவே இந்த தீர்ப்பு என்பது இறுதியானது அல்ல. ஆனால் தற்போது மக்களிடையே நாளையே இந்த ஆலை திறக்கப்படவிருக்கிறதாகவும், இன்றே மின் இணைப்பு கொடுக்கப்பட இருப்பதாகவும் போன்ற செய்திகள் மீண்டும் போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம். மேல் முறையீடு உறுதி எனவே மக்கள் அமைதியாக இருங்கள். நாம் போராட்டம் பண்ண வேண்டிய தேவை இருக்காது. நம் நேர்மையாக சட்ட போராட்டம் நடந்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும் எனக்கூறினார்.